Sunday, 25 August 2013

ஆந்திர ஊறுகாய்.. அமோக லாபம்




தினுசு தினுசாக வந்தாலும், நல்ல சுவை, தரம் உள்ள ஊறுகாய்க்கு என்றுமே கிராக்கி உள்ளது. தேடி வந்து வாங்குவார்கள். எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய் உள்ளிட்ட ஊறுகாய்களோடு, மருத்துவம் குணம்மிக்க புதுவகை ஊறுகாய்களை தயாரித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்Õ என்கிறார்கள் ஆந்திராவை சேர்ந்த சகோதரர்கள் சீனு மற்றும் ராஜூ. திருப்பூரில் 10 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் அவர்கள் கூறியதாவது: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, எங்கள் சொந்த ஊர். அங்கு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தோம். பகுதி நேரமாக ஊறுகாய் தயாரித்து விற்றோம். 10 ஆண்டுகளுக்கு முன் சேலத்தை சேர்ந்த நண்பர், எங்களைப் பார்க்க வந்தார்.
நான் தயாரித்த புதினா ஊறுகாயை ருசித்த அவர், ‘சூப்பர் டேஸ்டா இருக்கு. இதை எங்கள் பகுதியில் தயாரித்து விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்‘ என்றார்.

அடுத்த இரு மாதங்களில் நாங்கள்  திருப்பூர் வந்து தொழிலை தொடங்கிவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக புதினா, பூண்டு, இஞ்சி, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், மாங்காய், பாகற்காய், நார்த்தங்காய் உள்ளிட்ட பலவகை ஊறுகாய்களை தயாரித்து வருகிறோம். இதில் சிறப்பானது புதினா ஊறுகாய். புதினா ஊறுகாய் ஆந்திராவில் பிரபலம். அதை சாப்பாட்டில் போட்டு பிசைந்து சாப்பிடுவோம். அந்த அளவுக்கு புதினா ஊறுகாய் ஆந்திர மக்களுக்கு பிடிக்கும்.

புதினா ஊறுகாய் பற்றி இங்குள்ளவர்களுக்கு அவ்வளவாக தெரியாததால், அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். இப்போது திருப்பூரில் எங்களின் புதினா ஊறுகாய் தான் பிரபலம். வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறோம். சிறிய பைகள், பாட்டில்களில் அடைத்து தினசரி 15 கிலோ விற்கிறோம். இத்தொழிலுக்கு பெரிய அளவு முதலீடு தேவையில்லை. தரத்தோடும், சுவையோடும் தயாரித்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

தனி இடம் தேவையில்லை. வீட்டு சமையலறையே போதும். பொருட்களை அரைக்க மிக்ஸி, 2 பிளாஸ்டிக் டப், ஒரு கிலோ கொள்ளளவு உள்ள பாட்டில்கள், 50, 100, 200 கிராம் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கவர்கள் தேவை. புதினா மற்றும் இதர பொருள்கள் மொத்த காய்கறி மார்க்கெட்டிலும், பாட்டில்கள் பழைய பாட்டில் வியாபாரிகளிடமும் குறைந்த விலையில் கிடைக்கும்.

முதலீடு குறைவு

வீட்டில் உள்ளவர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செய்யலாம். தினசரி 15 கிலோ ஊறுகாய் தயாரிக்கலாம். ஒரு கிலோ ஊறுகாய் தயாரிக்க தேவையான பொருட்களுக்கு ரூ.60 செலவாகும். தினசரி முதலீட்டு செலவு ரூ.900. மாதம் ரூ.27 ஆயிரம் வேண்டும்.பாட்டிலில் அடைத்து விற்றால் ரூ.80க்கு குறையாமலும், பாக்கெட்கள் மூலம் விற்றால் ரூ.110க்கு குறையாமலும் விற்கலாம். தினசரி குறைந்தபட்ச லாபம் ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை என மாதம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.22,500 வரை லாபம் பார்க்கலாம்.

சந்தை வாய்ப்பு

புதினா ஊறுகாய்க்கு நல்ல மவுசு உள்ளது. கடைகளுக்கும், வீடுகளுக்கும் சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். ஒருமுறை வாங்கியவர்கள், அடுத்து தானாகவே நம்மை தேடி வந்து ஆர்டர் தருவார்கள்.  உணவகங்களிலும் விற்பனை செய்யலாம்.

ஸ்பெஷல் புதினா ஊறுகாய்

ஒரு கிலோ புதினாவை சுத்தம் செய்து நறுக்கி, உப்பு 100 கிராம், மிளகாய், புளி தலா 25 கிராம்,  இஞ்சி, மல்லி, சீரகம் 2 டேபிள் ஸ்பூன் அளவு வீதம் சேர்த்து மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 300 மி.லி. நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி, இதை போட்டு தாளித்தால் நிமிடத்தில் புதினா ஊறுகாய் தயார். மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய் ஊறுகாய்களை போல, புதினா ஊறுகாய்க்கு ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

விதவிதமான ஊறுகாய் தயாரிப்பது எப்படி?

எல்லா வகையான ஊறுகாய்களையும் தயாரிப்பது எளிதுதான். பக்குவம் தவறிவிடக்கூடாது. சுவையில் மற்ற ஊறுகாயில் இருந்து வித்தியாசம் காட்ட வேண்டும். அப்போதுதான் மார்க்கெட்டில் நிற்கும்.

பூண்டு

வாணலியில் 400 மி.லி. நல்லெண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் கடுகு தாளித்து, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு கிலோ உரித்த பூண்டு போட்டு வதக்க வேண்டும். பூண்டு பொன்னிறமாக வதங்கியவுடன் தேவைக்கேற்ற உப்பு, 20 எலுமிச்சம்பழங்களின் சாறு ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். சாறு வற்றியவுடன் 300 கிராம் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறினால் பூண்டு ஊறுகாய் தயார்.

எலுமிச்சை

40 எலுமிச்சம்பழங்களை நன்றாக கழுவி, துண்டுகளாக வெட்டி, தேவையான அளவு உப்பு போட்டு ஒருநாள் முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் பகலில் வெயிலிலும், இரவில் மூடியும் வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய் 40, 2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து அவற்றை எலுமிச்சம்பழத்தோடு கலக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 2 நாள் மூடி வைக்க வேண்டும். இடை இடையே உலோகமில்லாத கரண்டியால் கிளறி வந்தால் எலுமிச்சை ஊறுகாய் தயாராகும்.

மாங்காய்

8 மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் 6 ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 ஸ்பூன் கடுகு தாளித்து, அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். அதில் 200 கிராம் மிளகாய்ப்பொடி, 4 பிடி உப்பு, ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 2 ஸ்பூன் பெருங்காயம், 2 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறினால் மாங்காய் ஊறுகாய் ரெடி.

நெல்லிக்காய்

8 பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, 2 ஸ்பூன் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 3 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய், 3 ஸ்பூன் உப்பு போட்டு கிளறினால் நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இதில் 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் கிளறியும் தயாரிக்கலாம்.

இஞ்சி, மிளகாய்

அரை கிலோ பச்சை மிளகாய், 200 கிராம் இஞ்சியை துண்டாக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து 10 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, 20 எலுமிச்சம்பழத்தின் சாற்றை ஊற்றி கலக்க வேண்டும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருங்காயம், 8 ஸ்பூன் கடுகு ஆகியவற்றைப் போட்டு தாளித்து அதில் இஞ்சி, மிளகாய் கலவையை போட்டு லேசாக கிளறினால் தயாராகிவிடும்.

பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்

பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடி கள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:

கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ், வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர், மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.

பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம், குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.

முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75 ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.

கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.
மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2 ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா 500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.

மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்

மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.

10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்

சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பது எப்படி?

வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப்பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ்: மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. சிக்கன், மட்டன் பிரியாணி மிக்சுக்கும் இதே பொருட்கள், இதே முறை.

பாயசம் மிக்ஸ் : ஜவ்வரிசி, பால்பவுடர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய்  ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். 6 மாதம் வரை கெடாது.

மட்டன் மசாலா : மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். சிக்கன் மசாலாவுக்கு இதே பொருட்களை கூட்டிக் குறைத்து சேர்த்து தயாரிக்க வேண்டும்.

சாம்பார் பொடி: மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.