Friday, 7 February 2014

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை!

விவசாயம்' என்றதுமே... 'அதுக்கெல்லாம் ஏக்கர் கணக்குல நிலம், ஆள் பலம், பணம் எல்லாம் இருந்தாத்தான் சாத்தியம்’ என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கும். ஆனால், ஏக்கர் கணக்கில் நிலமோ, பணமோ தேவையில்லை. மனதில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால்... கையகல நிலத்திலும், கலக்கலாக விவசாயம் செய்ய முடியும் என்பதை ஆங்காங்கே நிரூபித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கை விவசாயிகளில் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், காவல் ஆய்வாளர் இளங்கோவன்.
மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முப்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர். பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, கடற்கரை செல்லும் வழியில் சிறிது தூரம் சென்றால், பனை ஓலையால் வேலியமைக்கப்பட்ட இளங்கோவனின் பண்ணை வரவேற்கிறது.
''எனக்கு பூர்விகம், கடலூர் மாவட்டம், புதுப்பாளையம். எங்கப்பா வேளாண்மை துறையில அதிகாரியா இருந்தவரு. வீட்லயும் விவசாயம் செஞ்சுட்டு இருந்ததால... சின்ன வயசிலிருந்தே விவசாயத்து மேல அதிக ஆர்வம். காவல் துறையில வேல கிடைச்சாலும், விவசாய ஆர்வம்  குறையல. அந்த ஆர்வத்துக்கு, நண்பர் ராஜாமணியோட தொடர்பால, சமீபத்துல விடிவு பொறந்திருக்கு. முதல்ல சின்ன அளவுல செஞ்சு பார்க்கலாம். பிறகு, பெரிய அளவுல இறங்கலாம்னுதான் இந்த 25 சென்ட்ல விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
பலவிதப் பயிர்கள்!
''படிப்பு முடிச்சதும், உரக்கடையில கொஞ்ச நாள் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான், ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அதனால ஆரம்பத்துல இருந்தே, இயற்கை விவசாயம் பத்தின தேடல் இருந்துச்சு. ராஜாமணி மூலமாதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. இனியும் தயங்கிகிட்டே இருக்கக்கூடாதுனு சோதனை முயற்சியில இறங்கியாச்சு. இந்த 25 சென்ட்ல சவுக்கு, குமிழ், மா, வாழை, காய்கறிகள், தர்பூசணினு விதவிதமான செடிகளைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. இது மணற்பாங்கான இடம்கிறதால கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இந்த மூணு மாசத்துலயே செடிகள்ல நல்லா வேர் புடிச்சிருச்சு. இதுவே பாதி வெற்றிதான். இன்னும் கொஞ்ச நாள்லயே பசுமைக் கட்டிடும்'' என்ற இளங்கோவன், பண்ணையைப் பராமரித்து வரும் ராஜாமணியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான்கு வரிசையில் பயிர்கள்!
''மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள்னு அடுக்கு வரிசையில போட்டிருக்கோம். நடுவுல தர்பூசணி இருக்கு. மதுராந்தகம் பக்கத்துல இருக்குற பொலம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியவர் முத்துமல்லா ரெட்டியாரிடம் இருந்துதான் இந்த தொழில்நுட்பத்தைக் கத்துகிட்டோம். ஒரு சென்ட்ல ரோஜா, முல்லை, திசுவாழைனு இருக்கு. இங்கயே ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். நாங்க தங்குறதுக்கான ஒரு ஷெட்டும் இருக்கு. தோட்டத்தை சுத்தி பனை ஓலைகளை வெச்சு வேலி அமைச்சு... பக்கத்துல உயிர்வேலியாக நெய்வேலி காட்டாமணக்கை நட்டுட்டோம்.
முதல் வரிசையில ஓரடி அடி இடைவெளியில 150 சவுக்கு இருக்கு. அதுக்கு இடையில பாவக்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரி, தக்காளி இருக்கு. எதிர் பக்கத்துல 150 சவுக்கும், பத்தடி இடைவெளியில 15 சந்தன கன்னுகளும் நட்டிருக்கோம். சவுக்கு வளந்த பிறகு, நிலத்த சுத்தி வேலி மாதிரி ஆகிடும். ரெண்டாவது வரிசையில மூணடி இடைவெளியில 32 குமிழ் கன்னுகள் இருக்கு. அதுக்கு எதிர் பக்கத்துல பத்து அடி இடைவெளியில நாலு செஞ்சந்தனம் இருக்கு. இதுக்கான இடைவெளியில நாலு தென்னை, வாழை இருக்கு. மூணாவது வரிசையில பத்து அடி இடைவெளியில நாலு மாங்கன்னுகளும், 25 அடி இடைவெளியில 5 தென்னையும்,
5 வாழையும் கலந்து நட்டிருக்கோம். அதுக்கு எதிர்பக்கத்துல 5 அடி இடைவெளியில 22 சந்தனமும், ஒட்டுண்ணிச் செடியா மாதுளையும் நட்டிருக்கோம். நாலாவது வரிசையில 15 அடி இடைவெளியில பலாவும், அதுக்கு இடையில கொய்யாவும் நட்டிருக்கோம். எதிர் பக்கத்துல 8 அடி இடைவெளியில் 15 ரோஸ்வுட்டும், 15 சந்தனம் என 300 மரக்கன்றுகள் இருக்கு. சுத்தியும் மரப்பயிர்கள் போட்டதுக்கு பிறகு, ஒரு அடி இடைவெளியில 260 குழிகள் எடுத்து தர்பூசணி போட்டிருக்கோம்'' என்ற ராஜாமணி பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
''ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... வேப்ப மரத்தூள் (மரம் அறுக்கும் ஆலைகளில் கிடைக்கும்), குப்பை உரம் (திடக் கழிவு), எரு இது மூணையும் சம அளவில் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு, ஒவ்வொரு குழியிலயும் போட்டு கன்னுகளை நட்டிருக்கோம். சரியா வேர் பிடிக்காத செடிகளைப் பக்கவாட்டுல தோண்டி, வேரோடு எடுத்து வேறொரு இடத்துல வெச்சுடுவோம். அஞ்சு நாளைக்கு ஒரு தடவை, அமுதக் கரைசலையும், 11 நாட்களுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தையும் கொடுக்கிறோம். அமுதக் கரைசலை செடிகள்ல தெளிக்கிறப்போ, இனிப்புச் சுவைக்கு எறும்புகள் வருது. அந்த எறும்புகள் இலைகளைத் தாக்குற பூச்சிகளோட முட்டைகளை சாப்பிட்டுடுது. தவிர, 15 நாளைக்கு ஒரு தடவை வேப்பங் கொட்டைக் கரைசலையும் தெளிக்கிறோம்'' என்றார்.
பணம் தேவையில்லை...மனம் இருந்தால் போதும்!
மீண்டும் நம் முன் வந்த இளங்கோவன், ''சலுகை விலையிலதான் கன்னுகளை வாங்கினோம். தேங்காய் ஓலையிலயே ஷெட் போட்டுட்டோம். இப்படி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுட்டோம். 2 மாசத்துல தர்பூசணி மூலமாவும், 3 மாசத்துல பூக்கள் மூலமாவும் வருமானம் கிடைக்கலாம். வருமானத்தைவிட, மனசுல ஆர்வம் இருந்தா... சின்ன இடத்துலகூட விவசாயம் செய்ய முடியுங்கிறதுக்கு உதாரணமா ஒரு மாதிரிப் பண்ணையா ஆக்கணும்ங்கிறதுதான் எங்களோட முக்கிய நோக்கம். இதன் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்க முடியும்... சுற்றுச்சூழலையும் காப் பாத்த முடியும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!
 தொடர்புக்கு,
வேணு. ராஜாமணி,
செல்போன்: 97904-25912.

No comments:

Post a Comment