தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்
பொட்டுக்கடலை_1/4 கப்
காய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்
தேங்காய்ப்பால்_ஒரு கப் (விருப்பமானால்)
எள்_கொஞ்சம்
ஓமம்_சிறிது
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
கடலையெண்ணெய்_பொரிக்க
செய்முறை:
அரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக்கொள்.
இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம்,பெருங்காயம்,உப்பு சேர்த்து பிசைந்துகொள்.
மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வை.
எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும். (அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)
எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.இப்போது புழுங்கலரிசி முறுக்கு தயார்.
பச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும்.அவ்வளவுதான்.
ஆப்பம் & தேங்காய்ப்பால்
ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்தான் பெஸ்ட் காம்பினேஷன்.ஊரில் என்றால் ஆப்பத்தை செய்து வைத்துவிட்டுக்கூட தேங்காய் பறித்து அல்லது வாங்கி பால் பிழிந்துவிடலாம்.ஆனால் இங்கு (USA ) புதிய காய்தானா என்று உறுதி செய்துகொண்டு முதல் நாளே சிறிது பால் எடுத்து பார்த்துவிட்டுத்தான் ஆப்பத்திற்கு அரிசி ஊற வைக்க வேண்டும்.
தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி_2 கப்
புழுங்கல் அரிசி_2 கப்
வெந்தயம்_ஒரு டீஸ்பூன்
பழைய சாதம்_ஒரு கைப்பிடி
உப்பு_தேவைக்கு
ஆப்பம் செய்முறை::
வெந்தயத்தை முதல் நாளிரவே ஊற வை.
அடுத்த நாள் அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும் அரிசி,வெந்தயம்,சாதம் மூன்றையும் சேர்த்து நன்றாக நீர் விட்டு மழமழவென அரைக்க வேண்டும்.
பிறகு உப்பு கொஞ்சம் குறைவாக சேர்த்து கரைத்து வை.
இனிப்பான பால் சேர்த்து சாப்பிடும்போது உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால்தான் சுவை நன்றாக இருக்கும்.
அடுத்த நாள் பார்த்தால் மாவு புளித்து,நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.
ஆப்பம் ஊற்றும்போது சிறிய அளவில் மாவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்.
மீதி மாவை எடுத்து வைத்தால் அடுத்த வேளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வை.
ஆப்பம் வெந்ததும் (சிவக்க வேண்டாம்) தோசைத் திருப்பியால் அல்லது கைகளால்கூட எடுத்துவிடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்துவிடும்.
அதன்பிறகு என்ன!ஒரு குழிவானத் தட்டில் ஆப்பத்தை வைத்து தேங்காய்ப்பாலை ஆப்பம் கொஞ்சம் மூழ்கும் அளவுக்கு ஊற்றி சாப்பிட வேண்டியதான்.
தேங்காய்ப் பாலை சட்னி போல் தொட்டு சாப்பிட வேண்டாம்.அது நன்றாக இருக்காது.
இரண்டு ஆப்பம்தான் லிமிட்.அதற்கு மேல் என்றால் திகட்டிவிடும்.
தேங்காய்ப் பால் செய்முறை:
இரண்டு மூன்று பேர் என்றால் ஒரு மூடி தேங்காய் போதும்.
நல்ல சதைப்பற்றுள்ள தேங்காய் மூடி_1
சர்க்கரை_தேவைக்கு (நிறையவே தேவைப்படும்.பால் நல்ல இனிப்பாக இருக்க வேண்டும்)
பசும்பால்_1/2 டம்ளர் (விருப்பமானால்)
ஏலக்காய்_1 (இதுவும் விருப்பமானால்)
ஒரு மூடி தேங்காயைத் துருவியோ அல்லது சிறுசிறு துண்டுகளாக்கியோ மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போலாகிவிடும்.
பிறகு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவிற்கு மிதமான சுடு தண்ணீர் விட்டு பாலை வடிகாட்டிப் பிழிந்துகொள்.
அதனுடன் பசும்பால் 1/2 டம்ளர் அளவிற்கு காய்ச்சி சேர்த்துக்கொள்.(விருப்பமானால்)
தேங்காய்ப்பாலில் ஏலக்காய்,சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கரண்டியால் கலக்கிவிடு.
இப்போது தேங்காய்ப்பால் தயார்.
குறிப்பு:
சமயத்தில் ஆப்ப மாவு இல்லாவிட்டால் தோசை மாவைக்கூட ஆப்பத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
உளுந்து வடை
செப்டம்பர் 20, 2010 — chitrasundar5தேவையானப் பொருள்கள்:
உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்
புழுங்கல் அரிசி_1 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_ஒரு துளி
கறிவேப்பிலை_5
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வை.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வை. பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து பிசையவும்.
இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.
குறிப்பு:
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.
தட்டை (அ) எள்ளடை
தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்புகள்
பொட்டுக்கடலை_1/2 கப்
கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)
பூண்டு_2 பற்கள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.
பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கு.மாவு மழமழவென இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலை பருப்பு,பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்று.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வை.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வை.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வை.இப்போது சுவையான,மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.
குறிப்பு:
விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.
வடாம் (மற்றொரு வகை)
தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_சுமார் 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவிக் களைந்து ஊற வை.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடு.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வை.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்) , சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்.
இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே (ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்) வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய வை.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு பொரித்தெடு. இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.
முறுக்கு வடாம்
தேவை:
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_1/2 to 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊற வை.நன்றாக ஊறியதும்(4 அ 5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடு.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வை.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும்.காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்) , சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்.
முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்.அடுத்து இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடு.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவை.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடு.சிவக்க வைக்க வேண்டாம்.
முறுக்கு மாவு தயாரித்தல்
தேவை:
உளுந்து_ 1 கப்
பச்சைப் பயறு_1/2 கப்
கடலை பருப்பு_1/4 கப்
புழுங்கல் அரிசி_ 1/4 கப்
பொட்டுக் கடலை_ 1/4 கப்
செய்முறை:
மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு மழமழவென்று அரைக்க வேண்டும்.(இரண்டு விரல்களுக்கிடையில் மாவை எடுத்து தேய்த்துப் பார்த்தால் மழமழவென்று இருக்க வேண்டும்).இதற்கு நம் ஊர் மிக்ஸி தான் எற்றது.இங்குள்ள மிக்ஸி(USA)சரியாக வராது என்றே நினைக்கிறேன்.மாவை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி வைத்துக் கொள்.மேலே கூறிய விகிதத்தில் எவ்வளவு வேன்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.அடுத்த பதிவில் முறுக்கு செய்வதைப் பற்றி பார்க்கலாம்.
இட்லி
தேவையானவை
புழுங்கல் அரிசி – 8 கப்புகள்
உளுந்து – 1/2 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
செய்முறை
வெந்தயத்தை
முதல் நாள் இரவே அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட
வேண்டும்.அடுத்த நாள் அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவிட
வேண்டும்.சுமார் ஆறு மணி நேரம் ஊறவிட வேன்டும்.பின் உளுந்தின் தோலியைக்
கழுவி விட்டு ஃபிரிட்ஜில் ஒரு அரை மணி நேரத்திற்கு வைத்து விட
வேண்டும்.வெந்தயத்தையும் அவ்வாறே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு
உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து கிரைண்டரில் போட்டு நீர் விட்டு கொடகொடவென
மைய அரைக்க வேண்டும்.ஒரு 1/2 மணி நேரம் ஆன பிறகு(இடை இடையே சிறிது
சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்) ஒரு பாத்திரத்தில் வழித்து
எடுத்து கொடகொடவென கொடப்பி வைக்கவும்.இல்லை எனில் மாவு அமுங்கிவிடும்.பிறகு
அரிசியைப்போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாகக்
கலந்து தேவையான உப்பு போட்டு நன்றாகக் கரைத்து வைக்கவும்.அடுத்த நாள்
பார்த்தால் மாவு நன்றாக பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும்
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து
ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும். வெந்த
பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். வெண்மையான பஞ்சு போன்ற
இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தனியாக எடுத்து சிறிது
நீர் விட்டு கரைத்து தோசையாக வார்க்கலாம். நமக்கு விருப்பமான சாம்பார்
அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.
ஹோம் தயாரிப்பு நார்த்தங்காய் உறுகாய் தேவைக்கு
ReplyDeleteதமிழ்நாடு ,மதுரை,பிளாட் நம்பர் 18பொன்மேனி பாலாஜி நகர் முதல் தெரு,
செல் நம்பர்:-9842193776 /9788671390
1கிலோ ரூபாய் 80 மட்டுமே
வீட்டு தயாரிப்பு