Wednesday 2 April 2014

மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!




வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக.. தென்னை, பாக்கு, மூங்கில் உள்ளிட்ட மரப்பயிர்கள் என தங்களுடைய விவசாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலரும். இவர்களுக்கு நடுவே... தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகளை, விடாமல் பயிர் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அருகேயுள்ள சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ், அவர்களில் ஒருவராக, ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார். தன்னுடைய வயலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜை சந்தித்த போது, அன்போடு வரவேற்று... ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தவர், எனக்கு மூன்று ஏக்கர் இருக்கு. மொத்தமும் செம்மண் பூமி என்பதால், போட்டது விளையும். பாசனம் கொஞ்சம் பற்றாக்குறைதான். ஆயிரம் அடிக்கு போர் வெல் போட்டும் ஆடு கறக்க .. பூனை குடிக்கும் கதையாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. வழக்கமாக மிளகாய், பொரியல் தட்டை, வெங்காயம், கீரை, காய்கறிதான் சாகுபடி செய்வோம். ஆனால் இவைகளை மூன்று ஏக்கர்  முழுவதும் பயிர் செய்ய முடியாது. காரணம்.. இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் பி.ஏ.பி (பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்) தண்ணீர் கிடைக்கும். அப்போது மட்டும்தான் மூன்று ஏக்கரிலும் முழுவதும் வெள்ளாமை செய்ய முடியும்.

நஞ்சையான புஞ்சை!
வழக்கமாக என்னோட நஞ்சை நிலத்தில் மட்டும் கொத்தமல்லி கீரையை சாகுபடி செய்வேன். இந்த முறை மானாவாரி நிலத்தை குத்தகைக்கு பிடித்து, அதில் விதைத்திருக்கிறேன். என்னோட தோட்டத்திற்குப் பக்கத்தில் ஏக்கர் கணக்கில் காலி நிலங்கள் கிடக்கிறது. நல்ல மழை கிடைத்தால் மட்டும்தான் அதில் சோளம், கம்பு என்று எதையாவது விதைப்பாங்க. மற்றபடி, ஆடு மாடுகள்தான் மேய்ந்து கொண்டிருக்கும். அதனால் அதுகளோட எரு மொத்தமும் அந்த இடத்திலேயே மண்டி, நிலமும் வளமாக இருந்தது. அந்த மண்ணில் பாரம்பரிய விவசாய முறையில் கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம் என்று தோன்றவே.. இரண்டு ஏக்கரை குத்தகைக்குப் பிடித்து, என் தோட்டத்திலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் எடுத்துச் சென்று அதில்தான், இந்த முறை கொத்தமல்லி சாகுபடி செய்திருக்கிறேன். அரை, ஏக்கர் நிலத்தில்தான் கொத்தமல்லியை விதைப்பேன். ஒரு பக்கம் அறுவடை நடக்கும் போதே, அடுத்த அரை ஏக்கரில் கொத்தமல்லியை சாகுபடி செய்வதுதான் என்னோட பழக்கம். குத்தகை நிலத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறேன்.

கோழி எருவை மட்க வைத்துதான் கொட்டணும்!
கலப்பையே படாமல் இருந்த அந்த நிலத்தில் புழுதி கிளம்ப கோடை உழவு செய்து ஆறப்போட்டுத்தான் வெள்ளாமை செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் அரை ஏக்கர் நிலத்தை மட்டும் சரி செய்து, ஆரம்பித்தேன். நாட்டுக் கோழிப் பண்ணை வைத்திருக்கிறேன். அதிலிருந்து 5 டன் கோழி எருவையும் கொண்டு வந்து போட்டதில் பயிர் நன்றாக வந்திருக்கு. கோழி எரு போடும் போது கொஞ்சம் கவனமாக இருக்கணும். அதில், காரத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால், காற்றோட்டமான இடத்தில் குவியலாக கொட்டி வைத்து, 45 நாள் ஆன பிறகுதான் அதை வயலில் போட வேண்டும். இல்லையென்றால் பயிர்களோட வேரை அது பாதித்துவிடும்.

45 நாளில் வருமானம்
மணல் கலந்த செம்மண் பூமியில், கொத்தமல்லி அருமையாக விளையும். இதன் வயது 45 நாட்கள். நிலத்தை பொலபொலவென உழுது மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். அரை ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் அல்லது, 5 டன் கோழி எருவை அடியுரமாக இட்டு, இரண்டு முறை உழ வேண்டும். பிறகு, இடவசதிக்கு ஏற்ப சதுர பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் சிறுசிறு மண்கட்டிகள், கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, மண்ணை சமன் செய்து விதைக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைக்கும் போது ஓரிடத்தில் அதிகமாகவும் இன்னோரிடத்தில் குறைவாகவும் விதைகள் விழுந்தால், முளைப்பு சீராக இருக்காது. அதனால், கவனமாக விதைத்து, பாத்திகளில் உள்ள விதைகளை மண் மூடும்படி குச்சி கொண்டு கீறி, மண் நனையும் அளவிற்கு மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
விதைத்த 3 –ம் நாளில் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விதைத்த 8 – ம் நாளில் இருந்து 10 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். 20-ம் நாளில் களை எடுத்து, பயிர் வளர்ச்சி ஊக்கியாக 25 கிலோ தழை – மணி – சாம்பல் சத்துக் கொண்ட உரத்தை பாசன நீரில் கரைத்துவிட வேண்டும். ( இவர் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் உரத்தைப் பயனபடுத்துகிறார்.) 30 – ம் நாளில் செடிகள் ‘தளதள’வென  வளர்ந்து பச்சைக்கட்டி நிற்கும். அதன் வாசமும் நிறமும் பூச்சிகளை ஈர்க்கும். அசுவிணி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கூட்டமாக வந்து செடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.

உடனடி விற்பனை!
45 – ம் நாளில் செடிகள் பாத்தி தெரியாத அளவிற்கு வளர்ந்து நிற்கும் இதுதான் அறுவடை தருணம். அளவான ஈரத்தில் செடிகளை வேருடன் பிடுங்கி, இரண்டு கைப்பிடி அளவிற்கு வைத்து வாழை நார் கொண்டு கட்டுகளாககக் கட்டி வேர்ப்பகுதியை மட்டும் தண்ணீரில் அலசி, வேர்களில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
நிழலான இடத்தில் வரிசையாக கட்டுகளை அடுக்கி வைத்து, ஈரத்துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தழைகள் வாடி உதிர்ந்து போகாமல் இருக்கும். கொத்தமல்லி, விரைவில் வாடிப்போகும் என்பதால், அறுவடை செய்த உடனே விற்று விடுவது நல்லது.

அரை ஏக்கரில் 30 ஆயிரம்!
கொத்தமல்லியைப் பொறுத்த மட்டும் எப்பவும் கிராக்கி இருந்து கொண்டேயிருக்கும். அறுவடைக்கு நான்கு நாளைக்கு முன்பே வியாபாரிகள் வந்து பாத்திகளை கணக்குப் போட்டு முன்பணம் கொடுப்பாங்க. அதற்காக அவங்களை மட்டுமே நம்ப வேண்டியதில்லை. உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் என்று நாமாகவே நேரில் கொண்டு சென்றும் விற்கலாம். நான், இந்த அரை ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் கிடைக்கம் என்று கணக்குப் போட்டு, கிலோ 12 ரூபாய் என்று விலை பேசி வியாபாரிகளிடம் விற்றுவிட்டேன். இதன் மூலமாக 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. மொத்த செலவு 12 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபம்.. அதுவும் 45 நாளில் என்று விற்பனை, வருமானம் மற்றும் லாபக் கணக்குகளைச் சொன்னார்.

தொடர்புக்கு
கனகராஜ்
செல்போன் : 98427 - 07280

No comments:

Post a Comment