Wednesday 2 April 2014

காவளிக் கிழங்கு.. உருளைக் கிழங்கிற்கு மாற்றாக ஒரு பாரம்பரிய ஊடுபயிர்!





காவளிக் கிழங்கு.. வாயுத் தொல்லைக்குப் பயந்து, கிழங்கு என்றாலே, காத தூரம் ஓடும் பலருக்கும் வரப்பிரசாதம்! ஏனெனில்,  இது மண்ணிற்குக் கீழே காய்ப்பதில்லை. இத்தகைய பாரம்பரியப் பெருமை மிக்க இக்கிழங்கை. விவசாயிகள் பலருமே மறந்து போய்விட்ட சூழலில்.... இயற்கை விவசாயிகள் சிலர் இன்னமும் சாகுபடி செய்து பாதுகாத்து வருகிறார்கள். அப்படி பாதுகாத்து வரும் சீர்காழி அருகே உள்ள தாண்டவன் குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி புலவர். ராசாராமன், காவளிக் கிழங்கு பெருமை பேசுகிறார் இங்கே...
உருளைக் கிழங்கு மாற்று!
நம் முன்னோர்கள் இப்படிப் பட்ட உணவுப் பொருட்களைத்தான் பயிர் செய்து வந்தார்கள். ஆண்டு முழுவதுக்குமான அவர்களின் உணவுத் தேவையை வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து கிடைப்பவற்றை வைத்தே பூர்த்தி செய்து விடுவார்கள். புடலை, அவரை, வெண்டி, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகல், கொத்தவரை, துவரை, கடலை... என அனைத்தையும் வீட்டைச் சுற்றியே சாகுபடி செய்து விடுவார்கள். அந்த வகையில், மலைப் பிரதேசங்களில் விளையும் உருளைக் கிழங்கிற்கு மாற்றாக சமவெளிப் பகுதிகளில் விளைய வைத்து வந்த கிழங்குதான் இந்த காவளிக் கிழங்கு என்றார் ராசாராமன்.
இந்தக் கிழங்கை உணவிற்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விதைக்காக தனியாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இது வாயுத் தொந்தரவு, சர்க்கரைப் பிரச்னை... என எதையும் உண்டு பண்ணாது. மார்கழி கடைசி அறுவடைக்கு வரும் காவளிக் கிழங்கை, அப்படியே பறித்துப் போட்டு வைத்து விட்டால், அடுத்த ஆடி மாதம் வரை அப்படியே இருக்கும். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாத்தாலே போதுமானது. உருளைக் கிழங்கில் என்னென்ன கறி சமைக்கிறோமோ... அத்தனையையும் இதில் செய்யலாம். அதே சுவை இருக்கும்.
ஒரு கொடியில் 50 கிழங்குகள்!
உண்மையிலேயே இதை தான் ஜீரோபட்ஜெட் என்று சொல்ல வேண்டும். இதற்காக எந்தச் செலவும் தேவையில்லை. ஒரே ஒரு கிழங்கை மட்டும் வாங்கி, மண்ணில் புதைத்து வைத்தால், அது முளைத்து கொடியாகி, அதில் ஐம்பது கிழங்குகள் வரையிலும் காய்க்கும். முதலில் காய்க்கும் காய் ஒரு கிலோ அளவிற்கு எடை வரும். அடுத்து வரும் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்து கொண்டே வரும். கடைசியாக காய்க்கும் காய் வெறும் ஒரு கிராம், இரண்டு கிராம்  எடையில்தான் இருக்கும். ஆடி மாதத்தில் இவை முளைக்கத் தகுந்த தட்பவெப்பம் நிலவுவதால், தானாகவே முளைத்து குருத்து வந்துவிடும். அந்தப் பருவத்தில் மரப்பயிர்களின் அருகில், இந்தக் கிழங்குகளை விதைத்துவிட வேண்டும். இதில் பூ பூப்பதில்லை. நேரடியாகக் காய் காய்த்துவிடும். ஐம்பது நாளில் முதல் காய் கிடைக்கும்.
இதில், ஆட்டுக் கொம்புக் காவளி என்று ஒரு ரகம் இருக்கிறது. இது 100 கிராம் அளவிற்குத்தான் காய்க்கும். இக்கிழங்கில் ஒரு சிறியக் கொம்பு இருப்பதால்தான் இந்தப் பெயர். இதையும் உணவாகப் பயன்படுத்தலாம்.
பெருவள்ளிக்கிழங்கு என்று ஒன்று உள்ளது. இது கொடி வகையாக இருந்தாலும், மற்ற கிழங்குகள் போல் மண்ணிற்கு அடியில், காய்க்கக்கூடியது. ஒரு கிழங்கு பத்து கிலோ வரையிலும் கூட இருக்கும். ஓராண்டு வரை, தோண்டாமல் விட்டுவிட்டால், இருபது கிலோ வரை கூட இருக்கும். இதையும் ஒரு வருடம் வரை வைத்திருந்து உருளைக் கிழங்கிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். வேறு எந்தக் கிழங்குகளையுமே விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
செலவில்லாத உணவு!
இந்த அனைத்துக் கிழங்குகளுக்கும் விதைப்பதைத் தவிர வேறு செலவுகளே இல்லை. கிழங்கு முளைத்து, கொடி வெளியில் வந்ததும் அருகில் உள்ள மரத்தில் ஏற்றி விட்டால் போதும். பூச்சித் தாக்குதல் கிடையாது. மரத்தோடு சேர்ந்து, தன் உணவை, தானே தயாரித்துக் கொள்ளும். அதனால் உரச் செலவும் கிடையாது. ஆடு, மாடுகளும் சாப்பிடுவதில்லை.
மொத்தத்தில் செலவில்லாமல் ஒரு வருட உணவுத் தேவையை சமாளிக்கும் கிழங்கு வகைகள் இவை. இதன் அருமை உணர்ந்துதான் எங்கள் தாத்தா. அப்பாவிற்கு பிறகு நானும் தொடா்ந்து பயிரிட்டு வருகிறேன். என்னிடமிருந்து கிழங்கு வாங்கிச் சென்று நிறையபேர் தற்போது உற்பத்தி செய்து வருகிறார்கள்.
ஆடியில் நடவு... மார்கழியில் அறுவடை!
மூன்றடி அகலம், ஓரடி ஆழம் கொண்ட குழியில்... அரை அடி ஆழத்திற்கு மட்கிய எரு, வேப்பம் பிண்ணாக்கு, அல்லது வேப்ப இலை ஆகியவற்றைப் போட்டு நிரப்பி, முளை வந்த காவளிக் கிழங்கை அதில் வைத்து மண்ணை நிரப்ப வேண்டும். முளைக்குருத்து மேல் நோக்கி மண்ணை விட்டு வெளியே தெரியும்படி இருக்க வேண்டும்.
குருத்து வளர, வளர அதை அருகில் உள்ள மரத்தின் மீது ஏற்றி விட்டு விட வேண்டும். வேம்பு, பூவரசு, கிளுவை, முருங்கை போன்ற மரங்களாக இருப்பது நல்லது. மரங்கள் இல்லாத நிலையில், முதலில் முருங்கை நட்டு, அது வளர்ந்தவுடன் இதை நடலாம். அதிக வெயில் இருந்தால், கிழங்கு காய்க்காது. அதனால் தான் இலைகள் அதிகம் உள்ள மரங்களில் ஏற்றி விட வேண்டும். ஆடி மாதத்தில் கிழங்கு நட்டால்... மார்கழி கடைசியில் பறித்து விடலாம். இடையில் எந்தச் செலவும் கிடையாது. பராமரிப்பு வேலையும் கிடையாது என்றார்.

மரங்கள் பெரும்பாலும் பத்தடி இடைவெளியில் நடவு செய்யப்படுவதால், அவற்றிற்கு இடையே மற்றப் பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது, இந்தக் கிழங்கையும் சேர்த்து சாகுபடி செய்யலாம். அதனால், ஒரே நேரத்தில் மரம், செடி, கொடி மூன்று விதமான பயிரையும் நம்மால் சாகுபடி செய்ய முடியும் என்றார்.
திசு வளர்ப்பிற்கு முன்னோடி..
காவளிக் கிழங்குதான் திசு வளர்ப்பிற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று தனது அனுபவம் மூலம் சொல்கறார், ராசாராமன்.
என்வீட்டில் போட்டு வைத்திருந்த கிழங்குகளில் ஒரு கிழங்கை 90 சதவிகித அளவிற்கு எலி சுத்தமாக கடித்து குதறிவிட்டது. மீதம் உள்ள பத்து சதவிகிதம் மட்டும் தோலோடு அப்படியே கிடந்தது. எல்லா கிழங்குகளும் முளைத்து வந்தபோது... எலி கடித்த அந்தக் கிழங்கும் தோலிருந்த பகுதியில் இருந்து முளைத்து வந்தது. அதைப் பதித்து வைத்தபோது மற்ற கொடிகளில் காய்த்தது போலவே அதுவும் காய்த்தது. இதை மற்றொரு முறையும் உறுதிப் படுத்திக் கொண்டேன்.
பெருவள்ளிக் கிழங்கைப் புதைக்கும் போது யாரை அருகில் வைத்துக் கொண்டு புதைக்கிறோமோ அவர்களது உருவத்திலேயே அந்தக கிழங்கு விளைந்து வரும் என்பது ஐதீகம். அது உண்மையும்கூட. அதனால், பெரும்பாலும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டுதான் இக்கிழங்கைப் புதைப்பார்கள் என்கிற அதிசயத் தகவலையும் சொன்னார்.
கொழுப்பைக் குறைக்கும் காவளி
காவளி கிழங்கின் மருத்துவப் பயன்கள் குறித்துப் பேசும் கன்னியாகுமரி, அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் ஼ராம், காவளிக் கிழங்கின், அறிவியல் பெயர் ‘டையோஸ்கோரியா பல்பிஃபெரா’ தமிழில் வெற்றிலை வள்ளிக் கிழங்கு என்றும் ஆங்கிலத்தில் ஏர் பொட்டடோ என்றும், மலையாளத்தில் ‘காஞ்சல்’ என்றும் இதற்குப் பெயர். இக்கிழங்கின் சிறப்புகளைப் பற்றி திருக்குறள், கலித்தொகை போன்ற இலக்கியங்களில் சொல்லி இருக்கின்றனர். ஆரம்பக் காலங்களில், ‘ஸ்டீராய்டு’ ஹார்மோன்கள் தயாரிப்பதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டிற்க்குப் பயன்படுத்தப்படும் ‘டையோஸ்ஜெனின் என்ற மாத்திரை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நம்முடைய முன்னோர்கள் பசியை அடக்க, இக்கிழங்கை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ள பெண்களும், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், காவளிக் கிழங்கை சமைத்து உண்டு வந்தால்... சரியாகிவிடும் என்று சொல்கிறார்.
தொடர்புக்கு
புலவர் ராசாராமன், செல்போன்: 96556 – 50125
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com

1 comment: