அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி...
ஊடுபயிர் என்றைக்குமே விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை என்று அடித்தச் சொல்கிறார். சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து முடித்து கையோடு, விவசாயத்திற்கு வந்துவிட்டேன். இப்போது 30 வருடமாகிறது. தென்னைக்கு இடையில் 18 வருடமாக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் காலங்களில் கிணற்றுப் பாசனம், மழைக் காலங்களில் ஏரிப்பாசனம். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான். சம்பாதிப்பதில் முக்கால் வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதில்லாமல் கட்டுபடியான விலையும் கிடைக்கவில்லை.
உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்பதை யோசனை செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாற்று வழியைக் காட்டியது ‘பசுமை விகடன்’தான். அதில் வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள், ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு.. இயற்கை வேளாண்மை பற்றிய விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதன் பிறகு முழு இயற்கை விவசாயியாக மாறினேன். இப்போது மூன்று வருடமாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்கிறேன். 10 ஏக்கர் தென்னந்தோப்பில் 8 ஏக்கரில் மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் உற்பத்திச் செலவு வெகுவாக குறைந்திருக்கிறது.
வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர்!
தோப்பில் 27 அடி இடைவெளியில் மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயது முதல் 40 வயது வரைக்கும் உள்ள மரங்கள், தோப்பிற்குள்ளே ஏகத்திற்கும் சூரிய வெளிச்சம் கிடைத்ததால் ஊடுபயிராக வாழை போட்டிருக்கிறேன். தனிப்பயிராக வாழையை நட்டால், ஏக்கருக்கு 1,000 மரங்கள் முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும். ஆனால், ஊடுபயிராக செய்யும்போது அதில் பாதிதான் நடமுடியும். வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் நடவு செய்ய வேண்டும். இரண்டு தென்னைக்கு இடையில் ஒரு வாழை என்று நட்டிருக்கிறேன்.
பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி – 9 என்று ஏழு ரகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன் -1,000 செவ்வாழை-500. தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன் – 500, ஜி -9 -800, மொந்தன்-500). மூன்று வருடமாக தோப்பில் உழவே செய்யவில்லை. தட்டைப்பயிரை ஏகத்திற்கும் விதைத்து விடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்தும் கிடைக்கிறது. அங்கங்கே செண்டு மல்லிச் செடிகள் இருப்பதால் நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோடு ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். இயற்கை முறை என்பதால் நோய்களே வருவதில்லை.
வாழையில் இது மூன்றாவது தழைவு. தாய் வாழையைச் சுற்றி நிறைய பக்கக் கன்றுகள் வளரும். இரண்டு மாதம் வளர்ந்த பிறகு, அதில் ஒன்றை மட்டும் விட்டுட்டு, மற்றக் கன்றுகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். இந்த இரண்டு மாதத்திற்குள் பக்கக் கன்றுகள் கிடைக்கும் இலைகளை அறுத்து விற்கலாம். பக்கக் கன்று வளர வளர, அறுவடை செய்த தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழே சாய்ந்துவிடும். அப்போது அதை வெட்டி, தோட்டத்தில் பரப்பிட்டால் உரமாகிவிடும்.
ஒரு தார் குறைந்தபட்சமாக 100 ரூபாய்க்கு விற்கும். அந்தக் கணக்கில் 4 ஆயிரத்து 800 தார் மூலமாக வருடத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இலை மூலமாக 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்கு கொடுப்பதற்கு என்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான கூலி, வருடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்தில் நடும்போது உழவு, குழி என்று ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாகிறது. வியாபாரிகளே அறுவடை செய்து கொள்வதால் அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாமல், ஊடுபயிர் மூலமாகவே எட்டு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.
ஜீரோ பட்ஜெட் பக்கம் வந்த பிறகுதான் விவசாயத்தின்மேல் எனக்கு பிடிப்பு வந்திருக்கு. ஓரளவு கட்டுபடியாகும் விலையும் கிடைக்கிறது. மகசூல் கூடியிருக்கு. இந்த வாழைப்பழங்களோட சுவையும் அருமையாக இருப்பதோடு, பழங்களும் சீக்கிரமாக கெட்டுப் போவதில்லை. அதனால் எனக்குக் கூடுதல் விலை கிடைக்கிறது என்றார்.
தொடர்புக்கு
தெய்வம் வரதராஜன், செல்போன்: 97875-41748.
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.11.12 www.vikatan.com
No comments:
Post a Comment