Wednesday, 2 April 2014

நேந்திரன் சிப்ஸ் தயாரிப்பில் கலக்கும் தம்பதி !



நேரடியாக விற்பனை செய்வது; மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது... இந்த இரண்டு முறைகளைப் பின்பற்றினால் மட்டும்தான், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்பது... பல கால பாலபாடம். இது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே... 'விவசாயத் தொழிலதிபர்கள்' தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்திருப்பது சந்தோஷ சங்கதி! கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த, சுந்தரம், 'விவசாயத் தொழிலதிபர்' என தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறார்! இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இந்த சுந்தரம், தன் மனைவி புனிதவதியுடன் இணைந்து, தனது தோட்டத்து வாழை மூலமாகவே சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து, அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

வழிகாட்டிய நண்பர்!
தோட்டத்துப் பண்ணை வீட்டில், சிப்ஸ் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த, சுந்தரம்-புனிதவதி தம்பதியைச் சந்தித்தபோது... ''அன்னூர்தான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்தோட களிமண் கலந்த நிலம் என்பதால், 24 வருடமாக வாழை வெள்ளாமைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன். மூன்று ஏக்கர் நிலத்தை இரண்டு பகுதியாக பிரித்து, சுழற்சி முறையில் வெள்ளாமை பண்றேன். அதனால் எப்பவும் வாழை இருந்துட்டே இருக்கும். ஆறு வருடத்திற்க்கு முன் நண்பர் ஒருத்தர் மூலமாக பஞ்சகவ்யா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். வாழைக்கு அதை உபயோகப்படுத்தினப்போது, நல்ல பலன் கிடைத்ததால், இயற்கை வழி விவசாயத்திற்க்கு மாற ஆரம்பிச்சேன்.

செலவைக் குறைத்த இயற்கை!
அந்த சமயத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துக்குறதுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதுக்கப்பறம் ஜீவாமிர்தத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு வருடத்தில் அருமையான மாற்றம் தெரிந்தது. மண் நல்ல வளமாயிடுச்சு. வாழையில் நோய்த் தாக்குதலே இல்லாமல்... காயெல்லாம் திரட்சியாக காய்ச்சுது. ரசாயனம் போட்டப்போது... பத்து டன்தான் மகசூல் கிடைக்கும். ஆனால், இயற்கைக்கு மாறின பிறகு... பதினைந்து டன் மகசூல் கிடைத்தது. செலவு குறைஞ்சதோட, மகசூலும் அதிகமாக கிடைக்கவே... சந்தோஷமாக நகர ஆரம்பித்தது வாழ்க்கை.

மதிப்புக்கூட்டல்!
என் தோட்டத்துல விளையும் வாழையில் குறிப்பிட்ட அளவை, இயற்கை விளைபொருள் விற்பனை பண்ற ஒருத்தர்தான் வாங்கிக்கறார். மீதியை வெளிமார்க்கெட்டுலதான் கொடுத்தேன். ஆனால், அவர் கூடுதலாக கொடுத்த விலை மாதிரி மத்தவங்க விலை கொடுக்கல. இதைப் பத்தி பேசினப்பதான், 'சிப்ஸ்’ தயாரிக்கற யோசனையை, அந்த வியாபாரியே சொன்னார். 'நேந்திரன்’ ரகத்தை சாகுபடி செய்ததால்... உடனடியாக, சிப்ஸ் தயாரிப்பில் இறங்கிட்டோம்'' என்ற சுந்தரத்தைத் தொடர்ந்தார் புனிதவதி.

கூடுதல் சுவை!
''ஆரம்பத்தில் இவருக்குக் கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. நான்தான் தைரியம் கொடுத்து, தொழிலைக் கத்துக்கிட்டு வரச்சொன்னேன். நாலு நாள் கத்துக்கிட்டவர், தொழில் தெரிஞ்ச ஆள் ஒருத்தரையும் கூட்டிட்டு வந்துட்டாரு. 'ஆர்கானிக் சிப்ஸ்தான் தயாரிக்கணும்’னு முடிவு பண்ணினோம். அதனால், தேங்காய் எண்ணெயில் இருந்து, தேவையான மத்த சாமான்கள் அத்தனையையும் இயற்கை விளைபொருளாக பார்த்து வாங்கித்தான் தயாரிக்க ஆரம்பிச்சோம். நல்ல திரட்சியான வாழைத் தாரை வெட்டி, சிப்ஸ் போட்டோம். இயற்கையில் விளைஞ்சதால் சுவையும் நல்லா இருந்துச்சு'' என்று புனிதவதி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார், சுந்தரம்.

தினமும் 50 கிலோ சிப்ஸ்!
''தயாரான சிப்ஸை கோயம்புத்தூர்ல இருக்கற நிறைய கடைகளுக்குக் கொண்டு போய் சாம்பிளா கொடுத்தேன். 'இது, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருட்களை வெச்சு தயாரிச்ச சிப்ஸ்'ங்கற விவரங்களை எடுத்துச் சொன்னேன். சில கடைகளில் ஆர்டரும் கொடுத்தாங்க. அடுத்த வாரத்தில் நான் திரும்பவும் சாம்பிள் கொடுத்த கடைகளைப் போய்ப் பாத்தேன். 'சிப்ஸ் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாவே இருக்குது’னு சொல்லி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியைக் கூட்டி இப்போ தினம் அம்பது கிலோ உற்பத்தி பண்றோம்.

ஏக்கருக்கு 1 லட்சம் கூடுதல் லாபம்!
15 கிலோ அளவுள்ள வாழைத்தார், குறைஞ்சது 150 ரூபாய் வரைக்கு விலை போகும். அந்தளவுள்ள தாரில் இருந்து, 3 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு கிலோ சிப்ஸுக்கு 150 ரூபாய் விலை கிடைக்கும். 3 கிலோவுக்கு 450 ரூபாய். சிப்ஸ் தயாரிப்பு, போக்குவரத்துச் செலவெல்லாம் போக, 250 ரூபாய் லாபமா கிடைக்கும். வாழையைத் தாரா விற்பனை பண்றதவிட, 100 ரூபாய் கூடுதலா... கிடைக்குது. என் தோட்டத்துல ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 1,000 வாழை மரம் இருக்கு. அதை கணக்கு பண்றப்போ... 1 லட்ச ரூபாய் அளவுக்குக் கூடுதலா லாபம் கிடைக்குது. கொஞ்சம் மெனக்கெட்டா... நல்ல லாபம் பாக்க முடியும்ங்கறதுக்கு நானே உதாரணம்'' என்றார், சந்தோஷமாக.


No comments:

Post a Comment