Wednesday, 2 April 2014

மகத்தான மகசூல் கொடுக்கும் ‘மருந்து வெங்காயம்’




25.12.12

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்த ‘பெல்லாரி’ வெங்காயத்தைத் தொடர்நது தற்போது வேகமாக பரவி வருகிறது ‘மருந்து வெங்காயம்’ எனப்படும் ‘ரோஸ் வெங்காயம்’ கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்த வகை வெங்காயம், முழுக்க முழுக்க ஏற்றுமதிக்காக மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் ‘மருந்து வெங்காயம்’ என்ற பெயரில் இது பிரபலமாகிவிட்டது. தற்பொழுது ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இது அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மருந்து வெங்காயத்தை ஆறரை ஏக்கரில் சாகுபடி செய்து, மூன்று மாதங்களில் 18 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கிறார், முனிராஜ் எனும் விவசாயி. ஒசூர் ராயக்கோட்டை சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது பீர்ஜே பள்ளி கிராமம். இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, முனிராஜின் தோட்டம். தென்னை, பீன்ஸ், வெங்காயம் என பசுமை காட்டி நிற்க இன்னொரு புறம் மருந்து வெங்காய அறுவடை மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவர் எப்பொழுதும் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோசு, காலிஃபிளவர், கொத்தமல்லி என்று மூன்று மாத பயிர்களைத்தான் சாகுபடி செய்துவந்துள்ளார். எந்தப் பயிராக இருந்தாலும் தண்ணீர் பராமரிப்பு என்று கவனமாக இருப்பதாக கூறுகிறார். அதனால் மற்றவர்களைவிட அதிக விளைச்சல் மற்றும் காய்கறிகளும் நன்றாக இருப்பதாக கூறுகிறார்.
ஜெகநாதன் வாத்தியார் கர்நாடகாவில் விளைகிற மருந்து வெங்காயத்தைப் பற்றி ஒரு நாள் கூறியுள்ளார். அதைகேட்ட முனிராஜ் இதுவும் மூன்று மாதப் பயிர்தானே என்று ஆறரை ஏக்கரில் பயிரிட்டு நல்ல விளைச்சல் கிடைத்ததோடு வருமானமும் கிடைத்ததால் அதையே தொடர்ந்து பயிரிட ஆரம்பித்ததாக கூறுகிறார் முனிராஜ்.
மலை அடிவாரப் பகுதிகள் ஏற்றவை
இதை திருவண்ணாமலை பகுதியில் சாகுபடி செய்து பார்த்தார்கள். ஆனால் சரியாக வரவில்லை. ஆனால் மலை பிரதேசங்கள் ஒட்டிய பகுதிகளில் இது நன்றாக விளைச்சல் தருகிறது.
குறிப்பாக திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் முயற்சி செய்து பார்க்கலாம். முதல் முறை என்பதால் இரசாயன உரங்களைக் கொண்டுதான் விளைய வைத்துள்ளார். இனிமேல்தான் இயற்கை உரங்கள் மூலமாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றார். எப்படிப் பார்த்தாலும் ஒரு மூட்டை வெங்காயம், 500 ரூபாய்க்கு கீழ் குறைய வாய்பில்லை. அதனால் நஷ்டம் வரவே வராது என்று உறுதியாகச் சொன்ன முனிராஜ், ஒரு ஏக்கர் நிலத்தில் மருந்து வெங்காயத்தை சாகுபடி செய்யும் விதத்தை சொல்ல ஆரம்பித்தார்.
ஏக்கருக்கு 12 கிலோ விதை
            மருந்து வெங்காயம் மூன்று மாதப் பயிர். நிலத்தை உழுது, வெயிலில் நன்றாக காயவிட்டு ஓர் உழவு செய்து, அடியுரத்துடன் வெங்காய விதையையும் கலந்து தூவி விடவேண்டும். ஏக்கருக்கு 12 கிலோ விதை தேவைப்படும். பிறகு, 5 கலப்பையால் கரைகளை அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வசதியாக பாத்திகளை அமைத்து. பாசனம் செய்ய வேண்டும். 8 முதல் 10 நாட்களுக்குள் விதை முளைத்துவிடும்.  20-ம் நாள் ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவைத் தூவ வேண்டும். 25-ம் நாளுக்குப் பிறகு 100 கிலோ பாக்டாம்பாஸ் உரத்தைக் கொடுக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை களைகளை முழுவதுமாக எடுத்து வர வேண்டும்.
            அப்பொழுதுதான் பயிர் நன்றாக வளரும். விதைத்து 45 நாட்கள் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு, அறுவடை வரை 2  நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. 60-ம் நாளில், ஏக்கருக்கு 100 கிலோ கலப்பு உரம் வைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 65-ம் நாளுக்கு மேல் பயிரின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, தேவைப்பட்டால் யூரியா இட வேண்டும். 90 நாட்களுக்கு மேல், காய் திரண்டிருப்பதை வைத்து, அறுவடையைத் தொடங்கலாம். அறுவடை செய்த வெங்காயத்தை, வயலில் 5 நாட்கள் காயப் போட்டு, காய்ந்த சருகுபளை நீக்கி, மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்து வைக்க வேண்டும். பிறகு, மூட்டைப் பிடித்து விற்பனை செய்யலாம்.
            ஆரம்பத்தில் இவர் இரண்டரை ஏக்கரில் போட்டுள்ளார். அது நல்ல செம்மண் பூமி. அதோட நட்ட சமயத்தில் மெல் மழையும் கிடைத்துள்ளது. 650 மூட்டை (50 கிலோ மூட்டை) மகசூல் கிடைத்தது. கிலோ 30 ரூபாய் என்று ஒரு மூட்டை 1,500 ரூபாய்க்கு விலை போனது. 650 மூட்டைக்கு 9 லட்சத்து 75 அயிரம் ரூபாய் கிடைத்தது. அடுத்த படியாக, மீதி இருக்கிற நான்கு ஏக்கரிலும் இதையே பயிர் செய்துள்ளார். ஆளால், மொத்தமே 550 மூட்டைதான் கிடைத்துள்ளது. இது சுண்ணாம்பு கலந்த மண், அதோட மழையும் சரியாக கிடைக்கவில்லை. அதனால்தான் மகசூல் குறைவு. இதில் 300 மூட்டையை ஒரு மூட்டை 1,800 ரூபாய்க்கு விற்றதில் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், 250 மூட்டையை ஒரு மூட்டை 1,500 ரூபாய் என்றும் விற்றதில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.  ஆகமொத்தம் ஆறரை ஏக்கரில் இருந்து 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய். ஒரு ஏக்கருக்கு 31 அயிரத்து 640 ரூபாய் செலவு. மொத்த செலவு 2 லட்சத்து 5 அயிரத்து 660 ரூபாய். செலவு போக மொத்தம் ஆறரை ஏக்கரில் இருந்து 16 லட்சத்து 84 ஆயிரத்து 340 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறினார்.
தொடர்புக்கு
முனிராஜ்
செல்போன் : 90953-50311
சுப்ரமணியம் – 99425-96971
பாலு – 98947-24236
தலைவர் மற்றும் பேராசிரியர்
காய்கறிப் பயரிகள் துறை, தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தொலைபேசி – 0422-6611283
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.12.12 www.vikatan.com

No comments:

Post a Comment