பெரும்பாலான இயற்கை விவசாயிகள், தங்கள் விளைநிலங்களையே ஆராய்ச்சிக் களங்கள் என மாற்றி, பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு.. தங்களுக்கான தொழில்நுட்பங்களையும், புதிய யுக்திகளையும் கண்டுபிடிப்பது வழக்கம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், அத்தகையோரில் ஒருவர்.
இவர், விரிச்சிப் பூ செடிகளுக்கிடையே, சோதனை முயற்சியாக சம்பங்கியை ஊடுபயிராக சாகுபடி செய்து, வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார். சுந்தர்ராஜை சந்தித்தபோது.. மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி. ஒன்றரை ஏக்கரில் சம்பங்கி, 40 சென்ட்டில் செண்டுமல்லி என்று சாகுபடி செய்கிறேன். மீதி இருக்கும் 60 சென்ட்டில்தான் விரிச்சியும் அதில் ஊடுபயிராக சம்பங்கியும் போட்டிருக்கிறேன்.
எனக்கு தெரிந்த வரைக்கும் விரிச்சியில், யாரும் சம்பங்கியை ஊடுபயிராக போட்டதில்லை. மூன்று வருடத்திற்கு முன் சோதனை முயற்சியாக... 20 சென்ட்டில் மட்டும் இரண்டையும் பயிர் செய்தேன். அதில் இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் நல்ல மகசூல் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பங்கியிலேயே வருமானம். இப்போது விரிச்சியில் தினமும் பத்து கிலோ அளவிற்கு பூ கிடைக்கிறது. அது மூலமாக தினமும் 750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த இரண்டு பயிரும் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து நல்ல மகசூல் கிடைப்பதால்.... அடுத்த 40 சென்ட்டிலும் இந்த இரண்டையுமே போட்டிருக்கிறேன்.
களைகளைக் கட்டுப்படுத்த பாலிதீன்!
சாகுபடி நிலத்தில் 4 சால் உழவு ஓட்டி, 40 சென்ட் நிலத்திற்கு 10 டன் மாட்டு எரு என்ற கணக்கில் போட்டு, மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். இரண்டே முக்கால் அடி அகலம், முக்கால் அடி உயரம் என முக்கால் அடி இடைவெளியில், பார்களை அமைக்க வேண்டும். பாரின் மீது 3 அடி அகலம் கொண்ட பாலிதீன் விரிப்புகளை விரித்து... அதன் மேல் 20 அடி இடைவெளிக்கு ஒரு சுழலும் திறப்பான் உள்ளவாறு தெளிப்பு நிர்ப் பாசனம் அமைக்க வேண்டும். நடவு மற்றும் விதைப்பு செய்ய வேண்டிய இடங்களில் மட்டும் 3 இஞ்ச் குழாய் ஒன்றைப் பயன்படுத்தி பாலிதீன் விரிப்பில் துளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனால், களைகள் வளர்வதேயில்லை.
பாரின் நடுவில் 8 அடி இடைவெளியில் விரிச்சி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் ஒன்றரையடி இடைவெளியில் சம்பங்கிக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 15-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலலை வடிகட்டி தெளிப்பு நீர் வழியாகத் தர வேண்டும்.
30-ம் நாள் தலா ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை 50 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். 40 –ம் நாள் ஒரு கிலோ ட்ரைக்கோ டெர்மாவிரிடியை 50 கிலோ மாட்டு எருவில் கலந்து, செடிகளைச் சுற்றிலும் தூவ வேண்டும். 50-ம் நாள் அரை லிட்டர் தேங்காய் பாலில் 3 லிட்டர் மோர், ஒரு கிலோ வெல்லம் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து... அதோடு ஒரு கிலோ சூடோமோனஸ், 50 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், செடியின் வளர்ச்சி வேகமெடுப்பதோடு, பூஞ்சணத் தாக்குதலும் கட்டுப்படும்.
65-ம் நாளில் இருந்து இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். சம்பங்கயில் 65-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும். 100 –ம் நாள், 200 கிலோ மண்புழு உரத்தை செடிகளின் தூரில் தூவ வேண்டும். 120-ம் நாள் 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும். 130-ம் நாளில் இருந்து மாதம் ஒரு முறை ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.
10 வருடம் வரை விரிச்சி!
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு கால் கிலோ அளவிற்க்குத்தான் சம்பங்கி பூ கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரித்து 90-ம் நாளுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரைக்கும் பூ கிடைக்க ஆரம்பிக்கும். இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் மகசூல் பார்க்கலாம். அதற்குப் பிறகு விரிச்சிச் செடிகள் நாலரையடி உயரத்திற்கு வளர்ந்து படர ஆரம்பிக்கும். அப்போது நிழல் கட்டிடுவதால் சம்பங்கியில் மகசூல் நின்றுவிடும். அப்போது சம்பங்கிச் செடியை அடிக்கிழங்கோடு பிடுங்கி, இலை, குச்சிகளை வெட்டிவிட்டு விதைக்கிழங்காக விற்றுவிடலாம். விரிச்சி மூலமாக 10 வருடம் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என்றார்.
தொடர்புக்கு
சுந்தர்ராஜ், செல்போன்: 98432-47106
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.11.12 www.vikatan.com
No comments:
Post a Comment