Wednesday, 2 April 2014

ஐஸ் கிரீம் தயாரித்தால்


ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலப்படுவார்கள். விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். சளி தொந்தரவு உள்ளவர்கள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையிலான ஐஸ் கிரீம்கள்கூட தற்போது விற்பனைக்கு வந்து விட்டன. எனவே ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்Õ என்று கூறுகிறார் ‘பான்பான்Õ ஐஸ் க்ரீம் தயாரிப்பாளர் சீனிவாசன். அவர் கூறியதாவது: சொந்த ஊர் தூத்துக்குடி. சென்னையில் நவீன வசதிகள் கொண்ட ஐஸ் கிரீம் கடை ஒன்றில் சாப்பிட்டபோது, நாமும் இதுபோன்று துவக்கலாமே என்று யோசித்தேன். அதற்கான தொழில்நுட்ப அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றேன்.

7 ஆண்டுக்கு முன்பு நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ரூ.20 லட்சம் முதலீட்டில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஐஸ் கிரீம் கடை துவங்கினேன். படிப்படியாக லாபம் வந்தது. கடையின் உள் அலங்காரம், உபசரிப்பு முறை போன்றவை வாடிக்கையாளர்களை கவர வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்காத, தொண்டைக்கு தொல்லை தராத ‘சாப்டிÕ ஐஸ் கிரீம்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது. 200 வகை சுவை கொண்ட ஐஸ் கிரீம்களை தயாரித்து விற்றோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் ஐஸ் கிரீம் விற்பனை கணிசமாக உயர்ந்தது.

பின்னர் கோவை நேரு ஸ்டேடியம், காந்திபுரம் மற்றும் ஈரோட்டில் கிளைகளை துவக்கினோம். 2 ஆண்டுக்கு முன்பு கோவை ராம்நகரில் ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கினோம். திருமணம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐஸ் கிரீம் சப்ளை செய்தோம். நேச்சுரல் ஐஸ் கிரீம் என்ற வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம். இது பழங்களையே ஐஸ் கிரீம் போல் தயாரித்து வழங்குவதாகும்.

சிறு மற்றும் பெரு நகரங்களில் உள்ள மேல்தட்டு குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் இளைஞர்கள் அன்றாடம் ஐஸ் கிரீம் சாப்பிடுவது வழக்கமாகி விட்டதால் புதுப்புது பிராண்ட் ஐஸ் கிரீம் தயாரித்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். தொழில் துவங்குபவர்களுக்கு ஆலோசனையும் வழங்குகிறோம்.
படங்கள்: பேச்சிகுமார்

தயாரிப்பது எப்படி?

சாப்டி ஐஸ்க்ரீம்

பாய்லரில் 200 லிட்டர் பாலை 40 டிகிரி சென்டிகிரேடில் கொதிக்க வைக்க வேண்டும். அதில் சர்க்கரை 25 சதவீதம், பால் பவுடர் 5, லிக்விட் குளுகோஸ் 2, ஸ்டெபிலைசிங் 1 முதல் 2, வெண்ணெய் 3 சதவீதம் சேர்த்து, 80 முதல் 90 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் 2 மணி நேரம் கொதிக்க வேண்டும். அதை சமச்சீராக கலக்கும் ஹோமோஜினேஷன் மெஷினில் கொட்டி ஒரு மணி நேரம் ஓட விட்டால் ஐஸ் கிரீம் பால் கிடைக்கும். பின்னர் அது, பைப் மூலம் மிருதுவாக்கும் ஏஜிங் வெட் மெஷினுக்கு செல்லும்.

5 சென்டிகிரேட் வெப்பத்தில் 6 மணி நேரம் ஓடவிட்டால் வெண்ணிலா கிரீம்  கிடைக்கும். வெண்ணிலா கிரீம்தான் அடிப்படை. இதை குளிர்சாதனம் பொருத்திய சாப்டி மெஷினில் கொட்டி அரை மணி நேரம் காத்திருந்தால் மைனஸ் 5 டிகிரியில் சாப்டி ஐஸ் கிரீம் ரெடியாகும். அதை குழாய் வழியாக கப் அல்லது கோனில் பிழிந்து, அதன் மேல் ஸ்ட்ராபெரி, பட்டர் ஸ்காட்ச், பிளாக்கரன்ட் போன்ற பல்வேறு சுவையுள்ள எசென்ஸ்களில் ஒன்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு ஊற்றினால் குறிப்பிட்ட சுவையுடைய சாப்டி ஐஸ் கிரீம் கிடைக்கும்.

ஹார்டு ஐஸ் க்ரீம்

வெண்ணிலா கிரீமை கப் அல்லது கோன் ஆகியவற்றில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் மைனஸ் 30 டிகிரி அளவுக்கு உறைய வைத்தால் ஹார்டு ஐஸ் கிரீம் தயாராகும். ஹார்டு ஐஸ் கிரீம்கள் ரெடிமேடாக விற்கத்தக்கவை. குளிர்சாதன பெட்டியில் (ஐஸ் ப்ரீஸர்) மைனஸ் 30 டிகிரியில் பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கலாம்.

முதலீடு

கிரீம் உற்பத்திக்கு தேவையான பாய்லர் மெஷின் ரூ.1.5 லட்சம், ஹோமோஜினேஷன் மெஷின் ரூ.2 லட்சம், ஏஜிங்வெட் மெஷின் ரூ.2 லட்சம், மெஷின்களை நிறுவ 20க்கு 60 அடி நீள, அகலமுள்ள  கட்டிடத்துக்கு அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம், ஐஸ் ப்ரீஸர் ரூ.15 ஆயிரம் என கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.85 லட்சம் தேவை.

உற்பத்தி செலவு: தினசரி 200 லிட்டர் கிரீம் தயாரிக்க ரூ.10 ஆயிரம் வீதம் மாதம் ரூ.3 லட்சம். வாடகை, மின்கட்டணம், ஊழியர்கள் 4 பேர் சம்பளம் ஆகியவற்றுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் என மாதம்தோறும் உற்பத்தி செலவுக்கு ரூ.3.5 லட்சம்.

துவக்கத்தில் கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ.9.35 லட்சம் வேண்டும்.

ஐஸ் கிரீம் பார்லர் மட்டும் வைக்க சாப்டி மெஷின் ரூ.3 லட்சம், இன்டீரியர் டெக்கரேஷன் ரூ.2 லட்சம். 10க்கு 20 அடி நீள, அகலமுள்ள கடை வாடகை அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம் என ரூ.5.5 லட்சம் தேவை.

பார்லருக்கு மாத செலவு மின்கட்டணம், 2 ஊழியர் சம்பளம், வாடகை ஆகியவற்றிற்கு மாதம் ரூ.20 ஆயிரம். விற்பனைக்குத் தேவையான வெண்ணிலா க்ரீம் 600 லிட்டர் ரூ.30 ஆயிரம். கப், கோன், ஸ்ட்ரா மற்றும் பல்வேறு வகை எசென்ஸ் ஆகியவை ரூ.5 ஆயிரம் என ரூ.55 ஆயிரம் தேவை. பார்லர் வைக்க துவக்கத்தில் ரூ.6.05 லட்சம் வேண்டும். உற்பத்தியோடு பார்லரும் சேர்த்து வைக்க ரூ.15.4 லட்சம் தேவை.

இயந்திரங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், உற்பத்தி பொருட்கள் பெரு மற்றும் சிறு நகரங்களிலும் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு

உள்ளூர் மற்றும் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர், தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாப்டி ஐஸ் கிரீம் பார்லர்களுக்கும், பிரத்யேக பார்லர்களுக்கும் வெண்ணிலா கிரீம் விற்கலாம். சிறு மற்றும் பெரு நகரங்களில் புதிய கிளைகளை துவக்கி நாமே விற்பனை செய்யலாம். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சப்ளை செய்ய மொத்த ஆர்டர் எடுக்கலாம். இதன் மூலம் 20 முதல் 30 சதவீத லாபமும், பார்லர் மூலம் விற்பனை செய்தால் 30 முதல் 40 சதவீதம் லாபமும் கிடைக்கும்.

பராமரிப்பு

ஒரு மணி நேர பயணத்தில் சப்ளை செய்யும் இடங்களுக்கு ஐஸ் ப்ரீஸர் மூலம் எடுத்து செல்லலாம். அதற்கு மேலான தூரத்துக்கு மைனஸ் 80 டிகிரி வெப்பநிலை நிலவும் வகையில் டிரை ஐஸ்களை, பெட்டிகளை சுற்றி வைத்து கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ஐஸ் கிரீம் உருகாமல் இருக்கும். ஐஸ் உருகிவிட்டால் அதில் பாக்டீரியா உருவாகும். பின்னர் மீண்டும் ப்ரீஸரில் வைத்தாலும், சாப்பிடுபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, சளி பிடிக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும்.

வெப்பநிலை முக்கியம்

ஐஸ்க்ரீமில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் உள்ளது. உடலுக்கு தேவையான சக்தி அளிக்க கூடியது. பொதுவாக ஐஸ்கிரீம் உடலுக்கு உஷ்ணம் தருபவை. அவற்றை குளிர் மற்றும் மழை காலத்தில் சாப்பிட்டால் உடல் கதகதப்பாக இருக்கும். ஹார்டு ஐஸ் கிரீம்களை மைனஸ் 30 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்காவிட்டால் பாக்டீரியா உருவாகும் வாய்ப்புள்ளது. மைனஸ் 5 டிகிரியுள்ள சாப்டி ஐஸ் கிரீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பானது. குளிர், மழை காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்காது.



முந்திரி ஐஸ்கிரீம்

கோடை ஆரம்பிச்சாச்சு... இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே.....

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.

* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.

* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.

* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

No comments:

Post a Comment