Wednesday, 2 April 2014

முயல் வளர்ப்பு.. முழுமையாக முயற்சித்தால்.. முத்தான வருமானம்!



10.6.12
இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர்  உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு, என்றாலே பலரும், வேண்டாம் என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக. ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன். எங்கப்பா லேப் டெக்னீசியன் வேலை பார்த்தாலும்.. விவசாயத்தை விடாமல் செய்து கொண்டிருந்தார். அந்த வருமானத்தில்தான் என்னை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பை முடித்துவிட்டு,ஹரிகோட்டாவில் இருக்கும் ‘இஸ்ரோ’ நிறுவனத்தில்.. விஞ்ஞானியாக 16 வருடம் வேலை பார்த்தேன்.

பிறகு, சவுதி அரேபியாவில் ஏழு வருடம் வேலை பார்த்தேன் அதன் பிறகு இந்தியாவிற்கே திரும்பிவிட்டேன். மூன்று வருடமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி கொண்டு வருகிறேன். அதன் மூலமாக, கல்வராயன் மலையில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு நடுவில் இணையதளம் மூலமாக முயல் வளர்ப்பைப் பற்றித்  தெரிந்து கொண்டேன். அதற்காக, கொடைக்கானலில் இருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி எடுத்து கொண்டேன். ஆரம்பத்தில், 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். மூன்று வருடத்தில் 1,500 முயல்கள் கிடைத்தது. அதில் ஆயிரம் முயலை விற்றுவிட்டேன். இப்போது 500 முயல்களை வைத்திருக்கிறேன் என்றார்.

இன விருத்தி அதிகம்!
சாப்பிடும் உணவை, கறியாக மாற்றும் திறனும், இன விருத்தியும்.. மற்ற விலங்குகளை விட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வளர்க்கலாம். நான் என்னோட வீட்டைச் சுற்றிக் கூண்டு வைத்து வளர்க்கிறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில் குறைவான கொழுப்பு, அதிக புரதம், குறைந்த கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவாக, சுவையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்வளவு இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம்.

இதை விற்க முடியாது என்றுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்தில் விற்பனை ஒரு பிரச்சினையே இல்லை. தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி பார்த்தால்தான்.. அடுத்தடுத்து சாப்பிடத் தோன்றும். நம்ம ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கும் அளவிற்கு முயல் கறி கிடைப்பதில்லை. அதனால் மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை. அதில்லாமல், முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால், அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் என்ற எண்ணமும் இருக்கு. அதனால்தான் பயன்பாடு குறைவாக இருக்கு. விழுப்புரத்தில் ஒரு ஹோட்டலில் நான் ஆர்டர் கேட்ட போது தினம் 5முயல் உங்களால் கொடுக்க முடிந்தால் நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார் என்று சொன்னாங்க. ஆனால், அந்தளவிற்கு என்னால் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு இனப்பெருக்கத்திற்கு, சோதனைக் கூடங்களுக்கு கறிக்கு என்று பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக் கொண்டுதான் இருக்கு. என்கிட்ட இருக்கும் ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடிவதில்லை. முயல் வளர்த்துக் கொண்டு இருப்பவங்களுகத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

மூன்று மாதங்களில் 3 கிலோ!
முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும் போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.

வலை கவனம்!
கொட்டகைக்கு அதகிச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை. அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக  கூண்டு செய்யாமல், பத்தடி நீளம். நான்கடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு ‘நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.

ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!
சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்திற்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.ஆணுடன் சேர்ந்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை வந்துவிடும்.

பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும். முயல்கள் பகல்வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு 210 முயல்கள்!
ஒவ்வொரு முயலும் சராசரியாக வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக 5 குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும்  ஏழு பெண் முயல்கள் மூலமாக வருடத்திற்கு 210 குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் கழித்து விற்கும்போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். சராசரியாக ஒரு கிலோவிற்கு 175 ரூபாய் விலை கிடைக்கிறது. ஒரு முயல் 350 ரூபாய் என்று 210 முயல்களையும் விற்கும்போது.. 73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம். இது, பத்து முயல்கள்  அடங்கிய  ஒரு யூனிட்டிற்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதில் லாபம் குறைவாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இதில் பராமரிப்பு குறைவு. அதாவது, இதற்காக நீங்க செலவிடும் நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாகவே இதைச் செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

5 யூனிட்டால்... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினால், வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட  விற்க முடியும் என்றார்.

இப்படித்தான் அடர்தீவனம் தயாரிக்கணும்.
மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமை தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு  அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருக்கின்றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் கறியில் உள்ள சத்துக்கள்!
புரதம் - 21%, கொழுப்பு - 11%, நீர்ச்சத்து -68%. 100 கிராம் கறியில்.. 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.
10 முயல்கள் வளர்க்க முரளிதரன் சொல்லும் ஒரு வருடத்திற்கான செலவு – வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
நிரந்தரச் செலவுகள் (5 ஆண்டுகளுக்கு)

தாய் முயல்
10,000
கூண்டு
8,000
மொத்தம்
18,000
நடைமுறைச் செலவுகள்
அடர் தீவனம்
44,900
பசுந்தீவனம்
2,600
மருத்துவச் செலவு
5,300
முயல் விற்பனை மூலம் வரவு
73,500
மொத்தம்
52,800
73,500
நிகர லாபம்
20,700
தொடர்புக்கு

govindaraj, செல்போன் :8190815622   website www.indian-farms.com

2 comments:

  1. முயல் ஏற்றுமதி வாப்பு உண்ட, கொட்டகை அமைப்பு, கூண்டு செய்தல், வளர்ப்பு பயிற்சி பெற நேரில் வரலாமா கூறுங்கள் ஐய

    ReplyDelete
  2. முயல் ஏற்றுமதி வாப்பு உண்ட, கொட்டகை அமைப்பு, கூண்டு செய்தல், வளர்ப்பு பயிற்சி பெற நேரில் வரலாமா கூறுங்கள் ஐய

    ReplyDelete