Wednesday, 2 April 2014

புதர் நிலத்திலும் புதையல் எடுக்கலாம்... கலக்கல் வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!






பகதி நேர விவசாயியின் பலே சாதனை!
விவசாயத்தில் வெற்றி, தோல்வி சகஜம்தான். ஆனால், குதிரைக்குக் கடிவாளம் கட்டிய மாதிரி எல்லோரும் செய்வதையே நாமும் செய்துவிட்டு, ‘நஷ்டம், நஷ்டம்’ என்று புலம்பக் கூடாது, நம்ம மண்ணிற்கு, சூழலுக்கு எது ஏற்றதோ அதை ஆர்வத்துடனும், அர்பணிப்புடனும் செய்தால் வெற்றி தானாக வரும்.
இப்படி நம்பிக்கைத் தெறிக்கப் பேசுகிறர், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகேயுள்ள மருதன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பன். பிள்ளையார்பட்டி இந்தியன் பேங்கில் அலுவலக உதவியாளராக இருக்கிறேன். விவசாயம் எனக்குப் புதிதல்ல. பரம்பரைத் தொழில்தான் ஆனால், நான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் என்னிடம் நிலமெல்லாம் இல்லை. சொந்தமாக தோட்டம் வாங்க வசதியும் இல்லை. ஆனாலும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற  ஆசை மனதிற்குள் இருந்தது.
அப்படி இருக்கும்போது... எட்டு வருடத்திற்கு முன் நண்பர் ஒருவர் மூலமாக இந்த இடம் விற்பனைக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். வந்து பார்த்த போது, புதர் மண்டி தரிசாகக் கிடந்தது. குளத்திற்குள் இறங்கி ஓடைப்பாதை வழியாகத்தான் போக வேண்டும். அதனால், யாருமே வாங்குவதற்கு முன்வரவில்லை. அந்தக் காரணத்தை வைத்தே  விலையும் குறைவாகத்தான் இருந்தது. என் பட்ஜெட்டிற்குள் இருந்ததால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று துணிந்து நான்கு ஏக்கரை வாங்கிவிட்டேன்.
உழைப்பு கொடுத்த ஊதியம்!
வாங்கிய கையோடு ஒரு குடிசையைப் போட்டு அதில் தங்கி அதிகாலை நேரம், சாயங்கால நேரங்களில் புதரை ஒதுக்க ஆரம்பித்தேன். வீட்டுப்பக்கம் போகாமல் இருக்கவே.. என் மனைவியும் இங்கே வந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தாங்க. பேங்க் வேலை முடிந்து வந்ததும்.. தோட்ட வேலையை ஆரம்பித்துவிடுவேன். கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து, தோட்டமாக்கி போர் போட்டு அடி பைப்  பொருத்திவிட்டேன். அதன் பிறகு மாங்கன்னுகளை நட்டு வைத்தேன். அதில் ஊடுபயிராக காய்கறிகளையும் சாகுபடி செய்கிறேன்.
அடி பம்பில் அடித்துதான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன். மாங்கன்னுகளுக்குப் பக்கத்தில் சின்னத் துளை போட்ட மண்பானையை வைத்து அதில் தண்ணீரை நிரப்பிவிடுவேன். அப்படியே வளர்ந்த மாங்காயில் கிடைத்த வருமானத்தை வைத்துதான் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்து இடங்களை வாங்கினேன். இப்போது என்னிடம் மொத்தம் 10 ஏக்கர் இருக்கு.
ஊடுபயிராக வாழை!
இதில் 5 ஏக்கரில் என்.ஏ.7, சக்கையா, பி.எஸ்.ஆர் என்று நெல்லி ரகங்கள் இருக்கு. அதில் ஊடுபயிராக அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி ரக மாமரங்கள் இருக்கு. 5 ஏக்கரில் பெங்களூரா, நீலம், செந்தூரம் என்று மா இருக்கு. இதில் ஊடுபயிராக ஜீ-9, ரஸ்தாளி, கதளி என்று வாழை ரகங்கள், பலா, காய்கறிகள், எலுமிச்சை, சப்போட்டா என்று கலந்து வைத்திருக்கிறேன்.
நிலத்தோட வேலி ஓரங்களில் குமிழ், தேக்கு, ரோஸ்வுட், செஞ்சந்தனம் மாதிரியான மரங்கள் இருக்கு. மரங்களுக்கு 4 வயசாச்சு. வேலி ஓரமாக இருப்பதால், எல்லா மரங்களும் நன்றாக வளர்ந்திருக்கு.
சும்மாவே விளையும் போது செலவெதற்கு?
ஆரம்பத்தில் ரசாயன விவசாயம்தான் செய்து கொண்டிருந்தேன். இடையில் ஒரு முறை மாவிற்கு மருந்தடிப்பதற்கு நேரமில்லாமல் விட்டுவிட்டேன். ஆனால், வழக்கமாக கிடைக்கும் அதே மகசூல் கிடைத்தது. அடப்பாவி, சும்மாவே விளைவதற்கு போயா இத்தனை காசை கொட்டினோம் என்று ஆகிப்போனது. அந்த நேரத்தில்தான் ‘பசுமை விகடன்’ அறிமுகமானது. அதைப் படிக்க ஆரம்பித்த பிறகு, இனி இயற்கை விவசாயம்தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு, நடவு செய்த நெல்லி முதற்கொண்டு எல்லாவற்றிற்குமே இயற்கைதான். 5 வருடமாக ரசாயனத்தைக் கையில் தொடுவது கூட இல்லை.
சொட்டு நீர்... சொந்தமாக அமைத்தால் செலவு குறைகிறது!
இயற்கைக்கு மாறினதும் பஞ்சகவ்யா தயாரித்து மா மரங்களுக்கும், நெல்லிக்கும் கொடுத்தேன். நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனால், பஞ்சகவ்யாவை நிறுத்திவிட்டேன். இப்ப இ.எம். கரைசலைத் தயாரித்துக் கொடுக்கிறேன். அதனுடன் கடைகளில் விற்கும் ஆர்கானிக் இடுபொருட்களையும் அவ்வப்போது கொடுக்கிறேன். எல்லா மரத்திற்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்.
தேவையானப் பொருட்களை வாங்கி கொண்டு வந்து நானே சொட்டு நீர்க் குழாய்களைத் தேவைக்கேற்ற மாதிரி அமைத்துக் கொண்டேன். அதனால் செலவு மிகவும் குறைவாகத்தான் வந்தது. மற்றபடி எனக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகளை, குன்றக்குடி கே.வி.கேயில் கேட்டுக்கொள்வேன்.
கால்சியம் பற்றாக்குறைக்கு ஜிப்சம்!
நெல்லிக்கு 16 அடிக்கு 16 அடி இடைவெளியில் ஒன்றரை கன அடியில் குழியெடுத்து.... ஒவ்வொரு குழிக்குள்ளும் 5 கிலோ நெல் உமி ஆகியவற்றைப் போட்டு நட வேண்டும். முதல் ஆண்டு முடிவில், ஒவ்வொரு செடியின் தூரிலும் 10 கிலோ குப்பை எருவைப் போட்டு, அதன் மேல் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி இ.எம்.கலந்த கரைசலை ஊற்ற வேண்டும். இரண்டாம் ஆண்டில் இருந்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்திற்கும் 10 கிலோ குப்பை எரு, 5 கிராம் அசோட்டோ பிளஸ், 5 கிராம் சூடோமோனஸ் மூன்றையும் கலந்து கொடுக்க வேண்டும்.
அது போக, கால்சியம் பற்றாக்குறை இருந்தால், ஆண்டிற்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு கிலோ ஜிப்சம் கொடுக்க வேண்டும். ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர் மாதங்களில் இலை வழித் தெளிப்பாக...ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் சூடோமோனஸ், 2 கிராம் அசோட்டோ பிளஸ், ஒரு கிராம் கருப்பட்டி என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவிற்குத் தெளிக்க வேண்டும்.
மூடாக்கு மட்டும் போதும்!
‘மா’விற்கு 30 அடிக்கு 30 அடி இடைவெளிவிட வேண்டும். நான்கு செடிகளுக்கு இடையில் எலுமிச்சை, சப்போட்டா, பலா, வாழை ஆகியவற்றை நடவு செய்யலாம். நடவிலிருந்து, 3 ஆண்டுகள் வரை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாட்டுச் சாணம் கலந்த குப்பை எருவை ஒரு செடிக்கு 10 கிலோ என்ற அளவில் போட வேண்டும். மரங்கள் பெரிதான பிறகு இலை தழைகளை மூடாக்காகப் போட்டு.. ஆணடிற்கு ஒரு முறை இடை உழவு செய்தால் போதுமானது.
நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை இலை வழித் தெளிப்பாக.. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அசோட்டோபிளஸ், 3 கிராம் வெட்ரீசன் (பயிர் வளர்ச்சி ஊக்கி) என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவிற்கு தெளிக்க வேண்டும். வாழைக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் அசோட்டோ பிளஸ், 2 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி எனக் கலந்து தேவையான அளவிற்கு இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.
2 டன் நெல்லி! 9.5 டன் மா!
இந்த 10 ஏக்கரிலும் சேர்த்து மொத்தம் 480 மா, 320 நெல்லி, 250 வாழை, 80 பலா, 40 எலுமிச்சை, 20 சப்போட்டா, 40 செஞ்சந்தனம், 60 ரோஸ்வுட், 3 குமிழ் மரங்கள் இருக்கிறது. பலாவில் 3 மரங்கள் மட்டும்தான் காய்க்கிறது. நெல்லியில் இரண்டு வருடமாக மகசூல் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு 2 டன் நெல்லி, 4 டன் பெங்களூரா, நீலம், செந்தூரம் ரகங்களில் கலந்து 4 டன், இமாம் பசந்த்,அல்போன்சா ரகங்களில் கலந்து 1 டன், அரை டன் பங்கனப்பள்ளி என்று மகசூல் கிடைக்கிறது. இதுபோக, எலுமிச்சையில் இரண்டு சீசனுக்கும் சேர்த்து 60 ஆயிரம் காய்களும், ஒரு டன் சப்போட்டாவும் கிடைக்கிறது.
ஆண்டிற்கு லாபம் ரூ.1,50,000!
என்.ஏ.7 சக்கையா ரக நெல்லிக்கு சராசரியாக 15 ரூபாய் விலை கிடைக்கிறது. அந்த வகையில் 2 டன்னிற்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் பெங்களூரா கிலோ 5 ரூபாய் என்று விற்கிறது. நீலம், செந்தூரம் ரகங்கள் கிலோ 5 ரூபாய் என்று விற்கிறது. இமாம் பசந்த், அல்போன்சா ரகங்களுக்கு கிலோவிற்கு 30 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும்.
பங்கனப்பள்ளி கிலோ 20 ரூபாய் என்று விற்கிறது. மொத்தமாக மா மூலமாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.ஒரு எலுமிச்சை 50 பைசா வீதம் 60 ஆயிரம் காய்க்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் சப்போட்டாவை உள்ளூரிலேயே கிலோ 12 ரூபாய் என்று விற்றுவிடுகிறேன். ஒரு தார் சராசரியாக 80 ரூபாய் என்ற கணக்கில் வாழை மூலமாக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
ஆகமொத்தம், 10 ஏக்கரிலிருந்து வருடத்திற்கு எப்படியும் இரண்டு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது. இதில் 50 ஆயிரம் செலவு என்று வைத்து கொண்டாலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.
இன்னும் பதினைந்து வருடம் கழித்து வேலி ஓரங்களில் இருக்கும் மரங்கள் மூலமாக ஒரு கணிசமான வருமானம் கிடைத்துவிடும். ஓய்வு நேர விவசாயத்தில் இவ்வளவு லாபம் கிடைக்கிறதே எனக்கு மனதிற்கு நிறைவாக இருக்கு என்றார்.
மதிப்புக் கூட்டினால் மகத்தான லபாம்!
நாச்சியப்பனிடம் பி.எஸ்.ஆர் ரக நெல்லியில் 20 மரங்கள் உள்ளன. அந்தக் காய்களை விற்பனை செய்யாமல் சாறு எடுத்து விற்பனை செய்கிறார். அதைப் பற்றி பேசியவர், இந்த ரக காய்கள் சின்னதாக இருக்கும். கிலோ 7 ரூபாய்க்குத்தான் கேட்பார்கள். அதனால், அதை விற்காமல் மதிப்புக் கூட்டி விற்கிறேன். காய்களைப் பறித்து அப்படியே ஒரு மண்பானை  அல்லது பிளாஸ்டிக்  குடத்தில் போட்டு காற்ற புகாத அளவிற்கு வேடு கட்ட வேண்டும். 60 நாள் அப்படியே வைத்திருந்து, அதை எடுத்து வடிகட்டினால் சாறு கிடைக்கும். 10 கிலோ நெல்லிக்கு இரண்டேகால் லிட்டர் சாறு கிடைக்கும்.
இதை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்க வேண்டும். தினமும் படுப்பதற்கு முன், 20 மில்லி சாறை 200 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும். இதை நிறைய பேர் என்னிடம் வாங்கி கொண்டு போறாங்க. ஒரு பாட்டில் (750 மில்லி) 200  ரூபாய் என்று விற்கிறேன். இது நன்றாக விற்பனையாகிறது. இதைச் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பசி எடுக்கும். 20 மரங்களிலிருந்து வருடத்திற்கு 800 கிலோ காய் கிடைக்கிறது. அதன் மூலமாக 240 பாட்டில் சாறு கிடைக்கிறது. ஒரு பாட்டில் 200 ரூபாய் என்று 240 பாட்டில்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இந்த வருமானம் உபரிதான் என்றார்.
தொடர்புக்கு
நாச்சியப்பன்
செல்போன்: 94420 – 43190
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு ,25.10.12 ,www.vikatan.com

No comments:

Post a Comment