Wednesday, 2 April 2014

ஆடு +தென்னை +மா, அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !




பறக்கப் பறக்கத்தான் இறகுகள் பலப்படும். உழைக்க உழைக்கத்தான் உயர்வுகள் உனதாகும்' அந்த ஆட்டுப் பண்ணையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை வாசகம், அங்கே நுழையும் அனைவரையும் ஈர்க்கிறது. பண்ணையின் உரிமையாளர்களான வாசுதேவன்-கவிதா தம்பதி, அந்த வாசகங்களுக்கு உதாரணமாகவும் நின்று கொண்டிருப்பது, அனைவரையும் வியக்க வைக்கிறது!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தேவிநாயக்கன்பட்டியில் இருக்கிறது, இந்தத் தம்பதிக்குச் சொந்தமான 'அருவங்காடு தோட்டம்’. ஒருபுறம் தென்னந்தோப்பு... மறுபுறம் மாந்தோப்பு. அவற்றுக்கிடையேதான்  பிரமாண்டமாய் நீள நீளமான பரண் அமைப்பிலான இரண்டு கொட்டில்கள். அவற்றின் நடுவே, தீவனம் அரைக்கும் இயந்திரம், பசுந்தீவனம் வெட்டும் இயந்திரம்... என ஒரு தொழிற்சாலை கணக்காக காட்சியளிக்கிறது, அவர்களுடைய 'வீரா ஆட்டுப்பண்ணை’!

கை கொடுக்கும் பசுமை விகடன்!
''முதல் புத்தகத்திலிருந்து இப்ப வரைக்கும் ஒன்று விடாமல் அத்தனை 'பசுமை விகடன்’ புத்தகங்களையும் நாங்க சேர்த்து வைத்திருக்கோங்க. அதைப் படித்துதான் 'கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை’ பற்றித் தெரிந்துக் கொண்டோம். இந்த இடத்தில் பரம்பரை பரம்பரையாக பண்ணையம் பண்ணிக்கிட்டிருக்கோம். தாத்தா, வீரப்ப கவுண்டர், அந்தக் காலத்திலேயே நூறு செம்மறி ஆடு, ஐம்பது வெள்ளாடு, ஐம்பது பால் மாடு என்ற வைத்து பண்ணையம் பண்ணிக்கிட்டிருந்தார்.

துவள வைத்த வேலையாள் பிரச்னை!
காலப்போக்கில்... கொஞ்சம் கொஞ்சமாக அதையெல்லாம் குறைச்சுக்கிட்டு, வீட்டுத்தேவைக்கு மட்டும் கால்நடைகளை வளர்த்துக்கிட்டிருந்தோம். நான் விவசாயத்துக்கு வந்து இருபத்தி மூன்று வருடம் ஆச்சு.
ஆரம்ப காலத்தில் வேலைக்கு ஆளுங்களைக் கூட்டிட்டு வருவது குதிரைக் கொம்பாக இருந்தது. ராத்திரியே டிராக்டரை எடுத்துக்கிட்டுப் போய் காத்துக் கிடந்து விடியற்காலை ஆளுங்களை ஏற்றிகொண்டு வரணும். 'காலையில் போயிக்கலாம்' என்று கொஞ்சம் தயங்கினால்... அவ்வளவுதான், வேற தோட்டத்துக்கு வேலைக்குப் போயிடுவாங்க.

இந்தப் பிரச்னையா்ல... ஒரு கட்டத்துல நான் ரொம்பவே நொந்துட்டேன். 'இனிமே நமக்கு இந்தப் பிஞ்சு வெள்ளாமை ஆகாது’ என்று மொத்தத்தில் தென்னை, மாமரம் இது இரண்டையும் வைத்துவிட்டேன். தென்னைக்கு இப்போ இருபது வயசாகிறது. மாமரத்துக்கு பதினைந்து வயசாகிறது. நடவு செய்ததிலிருந்து அந்த மரங்களுக்கு இதுவரை துளிகூட ரசாயனம் போட்டதில்லை. முழுக்க இயற்கை விவசாயம்தான். தொழுவுரம், ஆட்டுப்புழுக்கை, கொழிஞ்சினுதான் கொடுப்போம்.

பண்ணையிலேயே இருக்கணும் தொழுவுரம்!
பத்து ஏக்கர்ல 500 மாவும், 16 ஏக்கர்ல 1,000 தென்னையும் இருக்கு. அதுபோக கொஞ்சம் தரிசும் இருக்கு. இந்த மரங்களுக்கு வெளியில இருந்துதான் ஆட்டுப்புழுக்கையையும், தொழுவுரத்தையும் வாங்கிட்டு இருந்தோம். அதுக்குப் பெரிய டிமாண்டு. முதல் நாள் போய் நாம ஒரு ரேட் பேசி வைத்துவிட்டு மறு நாள் வண்டியோட போனால்... 'ஐம்பது, நூறு ரூபா அதிகமா கிடைக்குது’ என்று வேற ஆளுக்கு வித்துருப்பாங்க. 'அது சரிப்பட்டு வராது’ என்று தொழுவுரமும் நம்ம பண்ணையிலேயே இருக்கணும்னுதான் ஆட்டுப்பண்ணை வைக்கும் ஐடியா வந்தது.

திண்டுக்கல்லில் இருக்கும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின்  பேராசிரியர் பீர்முகமதுவைப் பார்த்து யோசனை கேட்டப்போதுதான் 'பரண் மேல் ஆடு’ முறை பற்றி சொன்னார். அதோட, 'பசுமை விகடனில் வந்திருந்த இரண்டு பண்ணைகளைப் போய் பார்த்துட்டு வந்தோம். உடனே அதற்க்கான வேலைகளை ஆரம்பிச்சுட்டோம்.

தலைச்சேரி கன்னி கலப்பு!
கேரளாவிலிருந்தும் பாண்டமங்கலத்திலிருந்தும் தலைச்சேரி ஆடுகளை வாங்கினோம். எட்டயபுரம், கோவில்பட்டி பக்கம் இருந்து கன்னி ஆடுகளையும் கிடாக்களையும் வாங்கினோம். அங்கங்க, நாலு போயர் பெட்டை, ஒரு போயர் கிடா, சிரோஹி ஆடு என்று வாங்கினதில் மொத்தம் இப்போ 350 ஆடுகள் இருக்கு. ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. நான்கு மாதமாகத்தான் விற்பனையை ஆரம்பிச்சுருக்கோம். எல்லா ஆடுகளும் சேர்ந்து உருவானதில் 160 கலப்பினக்குட்டிகளும் இப்போ கையில் இருக்கு.

உரத்துக்குப் பிரச்னையில்லை!
ஆட்டுப்பண்ணை ஆரம்பித்த பிறகு, தோட்டத்தோட உரத் தேவைக்கு பிரச்னையில்லை. ஆட்டுக்குட்டி விற்க்கிறது மூலமாக வருமானமும் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுபோக வீட்டுத்தேவைக்காக மூன்று பசு மாடு இருக்கு. ஐம்பது மாடு இருந்த காலத்துலயும் சரி இப்போவும் சரி... எங்க தோட்டத்திலிருந்து நூறு மில்லி பாலைக்கூட விற்றதில்லை. பால், தயிர்னு கேட்டு வந்தால் சும்மாதான் கொடுப்போம். இன்னமும் குழந்தைகளுக்குக்காக இலவசமாகத்தான் கொடுத்துகிட்டுருக்கோம். எங்க தாத்தா, 'பாலை விற்க்கக் கூடாது’ங்கிற கொள்கையில் இருந்ததாலதான் நான் மாடுகளை வாங்காமல் ஆடுகளை வாங்கினேன். அதேமாதிரி ஆட்டுப்புழுக்கையையும் நாங்க விற்பதில்லை. எங்க தோட்டத்துக்கு மட்டும்தான் உபயோகப்படுத்துவோம். குட்டிகளை மட்டும்தான் விற்க்கிறோம்'' என்றார்.

செலவே இல்லாமல் தீவனம்!
''பத்து ஏக்கரில் தென்னைக்கு இடையில், கோ-4, கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால், கிளரிசீடியா எல்லாம் போட்டிருக்கேன். தீவனங்களை வெட்டுவதற்க்கு, அடர் தீவனம் தயாரிப்பதற்க்கு என்று எல்லாவற்றிறற்க்கும் மெஷின் இருக்கு. அடர் தீவனத்துக்காக தனியா சோளத்தட்டை, மக்காச்சோளமும் சாகுபடி செய்து எடுத்து வைத்துக்  கொள்வோம். அதோட தட்டைகள், தோட்டத்தில் அங்கங்க இருக்கும் புல், வேப்பிலை எல்லாத்தையும் வெட்டி ஆடுகளுக்குத் தீவனமாக கொடுத்துவிடுவோம். 'ஆடு வளர்க்கணும்' என்று முடிவு செய்த உடனேயே... தீவன உற்பத்தியை ஆரம்பித்துவிட்டோம். தென்னைக்கு ஆட்டுப்புழுக்கை போடும் போது  அந்த ஊட்டத்துலேயே தீவனமும் நன்றாக வளர்ந்துவிடுகிறது. இது, செலவில்லாமல் தீவனம் கிடைத்த மாதிரிதான்.

ஆட்டுப் பண்ணைக்காக 200 அடி நீளம், 22 அடி அகலத்துல நல்லா சிமெண்ட் பில்லர் போட்டு, தரையை விட்டு ஐந்தடி உயரத்தில் இரண்டு ஷெட் போட்டிருக்கிறோம். அதை 20 அடிக்கு 22 அடி என்கிற கணக்கில் தடுப்பு போட்டு 20 அறைகளாக பிரித்து வைத்திருக்கிறோம். கழிவுகள் கீழ விழுந்துடுற மாதிரி சின்னச்சின்ன இடைவெளி விட்டு பலகையால் அடிப்பகுதியை அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு அறைக்கு வெளியேவும் தீவனம் வைக்கறதுக்கான அமைப்பும், உள்ளே தண்ணீர் வைப்பதற்கான அமைப்பும் இருக்கு.
மூன்று வேளை தீவனம்!
''ஒவ்வொரு அறையிலயும் இருபத்தைந்திலிருந்து முப்பது ஆடுகள் வரைக்கும் விட்டிருக்கோம். தாய் ஆடுகளும், கிடாக்களும் எப்பவும் கொட்டில்லதான் இருக்கும். குட்டிகளை மட்டும் மேய்ச்சலுக்கு அனுப்புவோம். காலையில் ஒன்பது மணிக்கு ஒரு ஆட்டுக்கு நாலரைக் கிலோ என்ற கணக்கில் எல்லா பசுந்தீவனங்களையும் கலந்து சின்னச்சின்னதாக மெஷினில் வெட்டிக் கொடுத்துடுவோம். இப்படி கொடுக்கறதால், எதையும் கழிக்காமல் அவ்வளவையும் ஆடுகள் சாப்பிட்டுவிடும்.

மதியம் ஒரு மணிக்கு ஆட்டுக்கு 200 கிராம் என்ற கணக்கில் அடர் தீவனம் கொடுப்போம். திரும்ப சாயங்கலாம் நாலு மணிக்கு காலையில் கொடுத்த மாதிரியே பசுந்தீவனம் கொடுப்போம். காலையில் ஷெட்டை நன்றாக சுத்தப்படுத்திவிடுவோம். எப்பவும் சுத்தமான தண்ணீர் நிரப்பிக் கொண்டே இருப்போம். பசுந்தீவனம் அறுத்துட்டு வந்து நறுக்குறது, தீவனம் தயாரிக்கிறது, பராமரிப்பு எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் (2 ஆண்கள், 2 பெண்கள்) தினசரி வேலைக்கு வர்றாங்க. டாக்டருங்க சொல்ற மாதிரி தடுப்பூசி போட்டுவிடுவோம். அதேமாதிரி குடற்புழு நீக்கம் செய்திடுவோம்'' என்று பராமரிப்புக் குறிப்புகளை அழகாக அடுக்கினார்.

மாதத்துக்கு 50 குட்டிகள்!
வருமானம் பற்றி பேச ஆரம்பித்த வாசுதேவன், ''வெள்ளாடுகள் இரண்டு வருஷத்தில் மூன்று ஈத்து எடுக்கும். ஒரு ஈத்துக்கு இரண்டு குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவோம். நன்றாக பால் குடித்த பிறகு கொஞ்ச நாள் மேய்ச்சலுக்கும் அனுப்புறோம். அதனால் எங்ககிட்ட வளர்ப்புக்கு வாங்கிட்டுப் போறவங்களுக்கும் ஆரோக்கியமான குட்டிங்கதான் கிடைக்கும்.
ஒரு குட்டி, மூன்றாயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து நான்காயிரத்து இரு நூறு ரூபாய் வரைக்கும் விலை போகிறது. நாங்கள் விற்பனையை ஆரம்பித்து நான்கு மாதம் ஆகிறது. மாதத்திற்க்கு நாற்பதைந்திலிருந்து ஐம்பது குட்டிகள் வரைக்கும் விற்க்கிறோம். சராசரியாக மாதத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

மாதம் 1 லட்சம் லாபம்!
ஆடுகளுக்கு அமைத்த கொட்டில்கள், தீவனம் தயாரிக்கும் மெஷின், வெட்டும் மெஷின், தாய் ஆடுகள், போக்குவரத்து என்று எல்லாவற்றையும் சேர்த்து 35 லட்ச ரூபாய் செலவாச்சு. சம்பளம், கரன்ட், தீவனம் எல்லாத்துக்கும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகிறது. இந்த ஒரு வருடத்தில் 40 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு பண்ணிட்டோம்.  மா, தென்னையில் கிடைக்கும் வருமானத்தை இதற்க்குதான் செலவு செய்துக்கிட்டிருந்தோம். இதுவரை சம்பாதித்த பணத்தையெல்லாம் புரட்டி இதில் போட்டாச்சு. இப்போதான் வருமானம் பார்க்க ஆரம்பிச்சுருக்கோம். இனி நிரந்தர முதலீடு எதுவும் கிடையாது. பராமரிப்புக்கும், தீவனத்துக்கும் மட்டும்தான் செலவு. அதை வைத்துப்  பாத்தால்... மாதம் 1 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். அடுத்த வருடம் குட்டிகளோட எண்ணிக்கை கூடலாம். அப்போது இன்னமும் வருமானமும் கூடும். போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்கறதுக்கு இன்னும் இரண்டு வருடம் ஆகும். அதற்க்கு பிறகு எல்லாம் லாபம்தான். கண்டிப்பாக இரண்டு வருடத்தில் எடுத்துவிடுவேன்'' என்றார். இயற்கை முறையில் தென்னை மற்றும் மா ஆகியவற்றை சாகுபடி செய்து வரும் வாசுதேவன், அவற்றின் பராமரிப்பு மற்றும் விற்பனை பற்றியும் விரிவாகவே பேசினார்...

மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!
''27 அடி இடைவெளியில் தென்னை இருக்கு. முன்னாடி, வருடத்திற்க்கு இரண்டு முறை கொழிஞ்சியையும் தொழுவுரத்தையும் செழிம்பாக் கொடுத்துட்டு இருந்தோம். இப்போது, ஆட்டுப்புழுக்கையையும் கொழிஞ்சியையும் கொடுத்துக்கிட்டிருக்கோம். வேற எந்த உரமும் கொடுப்பதில்லை. அதேமாதிரி தேங்காயாக விற்பதில்லை. கொப்பரையாக்கி, வெள்ளகோவிலில் இருக்கும் எண்ணெய் மில்லுக்கு நேரடியாக அனுப்பி வைத்திடுவோம். அதனால், புரோக்கர் கமிஷன், மார்க்கெட் கமிஷன் என்ற எந்தச் செலவும் இல்லை. போக்குவரத்துச் செலவு மட்டும்தான். நாங்கள், கொப்பரை அனுப்புற அன்றைக்கு மார்க்கெட் விலை என்னவோ... அதை அப்படியே கொடுத்துடுவாங்க.

சிரட்டை 8,000 ரூபாய்... மட்டை 4,000 ரூபாய்.
வருடத்திற்க்கு ஆறு தடவை காய் பறிக்கலாம். ஆயிரம் தென்னை மரங்களிலிருந்து, ஒரு முறைக்கு 30 ஆயிரம் காய் கிடைக்கிறது. ஆறு முறைக்கும் சேர்த்து 1,80,000 காய் கிடைக்கும். அதை உரித்து உடைத்துக் காய வைத்து பருப்பு எடுத்தால்... 18 டன் கொப்பரையும், 18 டன் சிரட்டையும் கிடைக்கும். 1 டன் சிரட்டை, 8 ஆயிரம் ரூபாய்; 1 லாரி லோடு தேங்காய் மட்டை 4 ஆயிரம் ரூபாய் என்று விலை போகிறது. சிரட்டை, மட்டையில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே தேங்காய் வெட்டுக்கூலி, உரிக்கிற கூலி, பருப்பு எடுக்கற கூலி எல்லாத்தையும் சமாளிச்சுடலாம். இயற்கை விவசாயம் என்பதால் உரச் செலவும் கிடையாது. கொப்பரை விற்க்கிற பணம் அப்படியே லாபம். ஆகக்கூடி... ஆயிரம் தென்னை மரங்களிலிருந்து வருடத்திற்க்கு 10 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கிறது. அதேமாதிரி மட்டைகளைப் பொடியாக்கும் மெஷின் ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். தேவையான அளவிற்க்கு மட்டும் மட்டைகளைப் பொடியாக்கி மூடாக்கு போட்டுடுவோம். மீதி மட்டைகளைத்தான் விற்ப்போம்.

நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...
25 அடி இடைவெளியில் மா மரங்கள் இருக்கு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, செந்தூரா, கருங்குரங்குனு 500 மரங்கள் இருக்கு. இதுக்கும் வருடத்திற்க்கு இரண்டு முறை இயற்கை உரம் மட்டும்தான் கொடுக்கிறோம். பத்து ஏக்கரிலிருந்து கிடைக்கும் பழங்களை விற்பது மூலமாக வருடத்திற்க்கு 4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதையும் நாங்க மார்க்கெட்டுக்கு அனுப்புவதில்லை. நேரடியாக, கரூர்லயும், கோயம்புத்தூர்லயும் இருக்கற பழமுதிர்ச்சோலை நிலையம் கடைகளுக்குதான் அனுப்புறோம். போக்குவரத்து மட்டும்தான் செலவு. இதன் மூலமாக கூடுதல் லாபம் கிடைக்கிறது. இயற்கையாக விளைஞ்சது என்று சொல்லி அதிக விலைக்கு விற்க்கணும் என்றெல்லாம் நாங்க ஆசைப்படவில்லை. மார்க்கெட் விலை கிடைத்தாலே போதுமானது. செலவு குறையறப்போது, தானா லாபம் கூடிடுதுல்ல'' என்றார் வாசுதேவன், மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்றவராக!
தொடர்புக்குவாசுதேவன், செல்போன்: 94433-29300.
பீர்முகமது, செல்போன்: 94433-21882.

No comments:

Post a Comment